/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு பெரும்பாக்கத்தில் 1.50 லட்சம் பேர் தவிப்பு
/
மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு பெரும்பாக்கத்தில் 1.50 லட்சம் பேர் தவிப்பு
மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு பெரும்பாக்கத்தில் 1.50 லட்சம் பேர் தவிப்பு
மொபைல் போன் 'டவர்' அமைக்க எதிர்ப்பு பெரும்பாக்கத்தில் 1.50 லட்சம் பேர் தவிப்பு
ADDED : டிச 18, 2024 12:05 AM
சென்னை, செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம், 264 ஏக்கர் பரப்பு கொண்டது. இது, ஆசியாவின் பெரிய குடியிருப்பு வளாகம்.
இங்குள்ள, 220 பிளாக்குகளில், 29,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் உள்ளன. கூடுதலாக, 3,300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன்படி, 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மேலும், 6 அரசு பள்ளிகள், ஒரு ஐ.டி.ஐ., மற்றும் ஒரு அரசு கல்லுாரியில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
மேலும், 7 குழந்தைகள் மையம், 5 ரேஷன் கடைகள், துணைமின் நிலையம், பணிமனை, காவல் நிலையம், வாரிய அலுவலகங்கள் உள்ளன.
இங்கு அரசு ஊழியர்களாக, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அனைத்து அலுவலகங்களிலும், இன்டர்நெட் வசதி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், 2, 3 மொபைல் போன்கள் உள்ளன.
ஆனால், எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் டவரும் இங்கு இல்லை. இந்த பகுதியை சுற்றி உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவன கட்டடங்களில் வைத்துள்ள டவர்களில் இருந்து தான் சிக்னல் கிடைக்கிறது.
ஆனால், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதால், சிக்னல் கிடைக்காமல், போன் பேச முடியாமலும், இன்டர்நெட் வசதி கிடைக்காமலும் சிரமப்படுகின்றனர். கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்களில் தொலைத்தொடர்பு கிடைக்காமல், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
முழுமையான ரீசார்ஜ் செய்தும், மொபைல் போனில் சிக்னல் கிடைக்கவில்லை. ஏற்கனவே, 'கட்டிங்' கேட்டு கொடுக்காததால், டவர் வைக்க வந்த தொலைத்தொடர்பு ஊழியர்களை, சிலர் தாக்கி துரத்தினர். சிக்னல் கிடைக்காமல், மாடிக்கு சென்று பேசும்போது, தடுக்கி விழுந்த சம்பவங்கள் அதிகம்.
ஆபத்தான அவசர உதவிக்கு, காவல் நிலைய எண்ணைக்கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது, குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, வாரியம், காவல் துறை இணைந்து, டவர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் கூறியதாவது:
எங்கள் கட்டடங்களில், போன் பேசவும், இன்டர்நெட் வசதியும் தடையில்லாமல் இருந்தால் தான், பணியை முழுமையாக செய்ய முடியும். காவல் நிலையத்திற்குள் சிக்னல் கிடைக்காமல், தெருக்களில் நின்று பேசுகிறோம்.
தனியார் கட்டடங்களில் டவர் வைக்க அனுமதிக்கின்றனர். இங்கு, சிலர் தங்கள் ஆதாயத்திற்காக, மக்களிடம் தவறான தகவல் கூறி துாண்டிவிட்டு, டவர் வைக்க விடாமல் தடுக்கின்றனர். வாரியம் டவர் அமைக்க அனுமதி வழங்கினால், போலீஸ் பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிக்னல் தடையின்றி கிடைக்க, பிளாக் கட்டடங்கள், காலி இடங்களில் டவர் வைக்க, அனுமதி வழங்க தயாராக இருக்கிறோம். ஒரு சிலர், மக்களை திசை திருப்பி எதிர்க்கின்றனர். முன்பை விட சிக்னல் பிரச்னை அதிகரித்துள்ளது. டவர் அமைக்க, மீண்டும் அனுமதி கேட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
- வாரிய அதிகாரிகள்.