/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணியின்போது மின்சாரம் பாய்ந்து திருவொற்றியூரில் 2 ஊழியர்கள் படுகாயம்
/
வடிகால் பணியின்போது மின்சாரம் பாய்ந்து திருவொற்றியூரில் 2 ஊழியர்கள் படுகாயம்
வடிகால் பணியின்போது மின்சாரம் பாய்ந்து திருவொற்றியூரில் 2 ஊழியர்கள் படுகாயம்
வடிகால் பணியின்போது மின்சாரம் பாய்ந்து திருவொற்றியூரில் 2 ஊழியர்கள் படுகாயம்
ADDED : ஜூலை 03, 2025 12:34 AM

திருவொற்றியூர், மழைநீர் வடிகால் பணியின்போது, மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் - நார்த் டெர்மினஸ் சாலை சந்திப்பு பகுதியில், மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.
இதையடுத்து, மழைநீர் வடிகாலின் ஒருபகுதியில் அடைக்கப்பட்ட சுவரை உடைத்தெடுக்கும் பணியில், நேற்று மதியம் மணலியைச் சேர்ந்த மணிகண்டன், 32, தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலைச் சேர்ந்த சின்ன குருசாமி, 41, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி, மழைநீர் வடிகால் தடத்தில் உள்ளே இறங்கி, 'டிரில்லிங்' மிஷினால் கான்கிரீட் சுவரை உடைத்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தின் நுனி பகுதி, புதை மின் வடத்தில் பட்டுள்ளது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதை பார்த்த அப்பகுதியில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் குமார் என்பவர், உடனடியாக உள்ளே இறங்கி மயங்கி கிடந்த இருவரையும், வாகன ஓட்டிகள் உதவியுடன் மீட்டு, வெளியே கொண்டு வந்தார். பின், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருவொற்றியூர் போலீசார் பலத்த தீக்காயமடைந்த மணிகண்டன் மற்றும் சின்ன குருசாமியை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், உள்ளே மின் ஒயரில் உரசியபடி இருந்த 'டிரில்லிங்' மிஷினால் தீ ஜூவாலைகள் மற்றும் பலத்த சத்தத்துடன் புகை கிளம்பியது. அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, மின் சேவையை நிறுத்தினர். தீயணைப்பு வீரர்கள், 'டிரில்லிங்' மிஷினை வெளியே எடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் மீட்ட, கரும்பு ஜூஸ் கடைக்காரர் குமாரின் செயலை அனைவரும் பாராட்டினர்.