/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளின் அருகே போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 200 பேர் கைது
/
வீடுகளின் அருகே போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 200 பேர் கைது
வீடுகளின் அருகே போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 200 பேர் கைது
வீடுகளின் அருகே போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 200 பேர் கைது
ADDED : செப் 09, 2025 01:26 AM

கொருக்குப்பேட்டை, பணி நிரந்தரம் கோரி, கொருக்குப்பேட்டையில் தங்களின் வீடுகளின் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக திரண்டவர்கள் என, 200க்கும் மேற்பட்டோரை போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னையில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்திடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
இதைக் கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துாய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன், ஆக., 1 முதல் 13 நாட்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கடந்த 4ம் தேதி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட, 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மீண்டும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தை அடுத்து, துாய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில், துாய்மை பணியாளர்கள் 13 பேர் நேற்று, பணி நிரந்தரம்கோரி தங்கள் வீட்டருகில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் திரண்டனர்.
அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். 'அமைதி வழியில் போராடும் எங்களை கைது செய்யக்கூடாது' எனக்கூறி, துாய்மை பணியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, போலீசாருக்கும், துாய்மை பணியாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின், துாய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோரை, போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர். கைதானோர், வாகனங்களில் ஏற்றி, அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவன மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
***