ADDED : மே 16, 2025 12:25 AM
புளியந்தோப்பு, துளசி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 53. இவர், 18 ஆண்டுகளாக, அதே பகுதியில், 'பன்னா சில்வர்' என்ற பெயரில், வெள்ளி பூஜை பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இங்கு, லோகநாதன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ், தன்மை உள்ளிட்டோர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களில், அர்ஜுன் தாஸ், தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். மற்றவர்கள், சுரேஷ் வீட்டின் மூன்றாவது தளத்தில் தங்கி இருந்தனர்.
கடந்த 13ம் தேதி, வேலை நிமித்தமாக அரியலுார் சென்ற சுரேஷ், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். நேற்று காலை, அர்ஜுன் தாஸ், லோகநாதன் மற்றும் தன்மை ஆகியோர் வேலைக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த சுரேஷ், வீட்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் இரும்பு பெட்டியை திறந்து பொருட்களை சரிபார்த்தார். அப்போது, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21.50 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின் படி, பேசின் பாலம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.