/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
214 டன் பட்டாசு கழிவுகள் சென்னையில் அகற்றம்
/
214 டன் பட்டாசு கழிவுகள் சென்னையில் அகற்றம்
ADDED : நவ 02, 2024 12:20 AM

தீபாவளி பண்டிகை தினமான நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை, 213.64 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து, நேற்று அதிகாலை முதல் அனைத்து மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில், துாய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், நேற்று மாலை நிலவரப்படி 213.64 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.
தாம்பரத்தில் 29 டன்
தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. 5 மண்டலங்களிலும் குப்பை சேகரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 70 வார்டுகளிலும் குப்பை அகற்றப்பட்டது. வழக்கமாக அகற்றப்படும் 400 டன் குப்பை இல்லாமல், கூடுதலாக 29 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டது.
ஆவடியில் 30 டன்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் வழக்கமாக, 175 டன் குப்பை சேகரிக்கப்படும். தீபாவளி தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் கூடுதலாக 30 டன் பட்டாசு குப்பை என என, 205 டன் குப்பை அகற்றப்பட்டன.
திருநின்றவூர் பேரூராட்சியில் 4 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டது.
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட இடங்களில், விதிமீறல், நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, முறையே 429, 67 மற்றும் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
142 பேர் காயம்
சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடி விபத்தில் 142 பேர் தீக்காயமடைந்தனர். இதில் தற்போது, 29 பேர் மட்டும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 64 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 11 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழிப்புணர்வால்
பாதிப்பு குறைவு
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப்பிரிவு தலைவர், நெல்லையப்பன் கூறியதாவது:
இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. போலீசார், தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிற சேவை துறைகள், பள்ளி ஆசிரியர்கள் போன்றோரின் விழிப்புணர்வு நடவடிக்கையால் விபத்துகளும், உயிர்சேதங்களும் தவிர்க்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் குழு -