/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை, புறநகரில் அடுத்தடுத்து சம்பவம் 216 சவரன் கொள்ளை
/
சென்னை, புறநகரில் அடுத்தடுத்து சம்பவம் 216 சவரன் கொள்ளை
சென்னை, புறநகரில் அடுத்தடுத்து சம்பவம் 216 சவரன் கொள்ளை
சென்னை, புறநகரில் அடுத்தடுத்து சம்பவம் 216 சவரன் கொள்ளை
ADDED : மே 16, 2025 12:48 AM

அண்ணா நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில், 216 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை நடந்துள்ளது. இதில், சென்னை, எம்.கே.பி.நகரில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த ஜவுளிக்கடைக்காரரை, கட்டிப்போட்டு அவரிடம் இருந்து, 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து மர்ம கும்பல் தப்பியது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுந்தர், 45; சைதாப்பேட்டை பஜார் சாலையில், 'சாயார் ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித், 30, என்பவர், ஆறு மாதமாக பணிபுரிந்தார். அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, சைதாப்பேட்டையில் வாடகைக்கு சுந்தர் வீடு எடுத்து கொடுத்தார்.
தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, சொந்த மாநிலத்திற்கு சென்ற ரோஹித், மீண்டும் சென்னை திரும்பி, 7ம் தேதி வேலையில் சேர்ந்தார்.
60 சவரன்
நேற்று காலை கடையை திறந்து ரோஹித் வருகைக்காக சுந்தர் காத்திருந்தார். வெகு நேரமாகியும் வராததால், அவர் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தார்; அங்கேயும் இல்லை. மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
சந்தேகமடைந்த சுந்தர், கடையில் இருந்த நகைகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது, பிரேஸ்லெட் விற்பனை பிரிவில் இருந்து, 60 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.
'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்த போது, முன்தினம் இரவு நகைகளை ரோஹித் திருடியதும், நகை அலமாரியை பூட்டி, சுந்தரிடம் சாவியை கொடுத்து தப்பியதும் தெரியவந்தது.
கொட்டிவாக்கம்
கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 61; தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தோழி வாயிலாக, வீட்டு வேலைக்கு நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ், 25, அவரது மனைவி பினிதா, 23, ஆகியோர், 3 வயது மகனுடன் கடந்த மார்ச், 22ம் தேதி மகேஷ்குமாரை அணுகி உள்ளனர்.
அவர்கள் அங்கேயே தங்கி வீட்டு வேலை செய்ய, தன் வீட்டின் பின்பக்கம் இருந்த ஒரு பகுதியை, மகேஷ்குமார் ஒதுக்கி கொடுத்துள்ளார்.
மகேஷ்குமாரும், அவரது மனைவியும் இரு தினங்களுக்கு முன், வேலுாரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
அப்போது நேபாள தம்பதி, குழந்தையுடன் மாயமாகி இருந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, மகேஷ்குமார் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவில் இருந்த, 60 சவரன் நகையை நேபாள தம்பதி திருடிச் சென்றது தெரியவந்தது.
அண்ணாநகர்
அண்ணா நகர், சாந்தி காலனியைச் சேர்ந்தவர் பத்மநாபன், 60; தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில், ஸ்டெல்லா, வனஜா, கீதா, சாவித்ரி என, நான்கு பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர்.
வீட்டில் உள்ள பீரோவில், 41 சவரன் நகையை பத்மநாபனின் தாய் வைத்துள்ளார். இதில், 35 சவரன் திருடு போனது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு அளித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார், வீட்டு பணிப்பெண் ஸ்டெல்லா மற்றும் அவரின் கணவரிடம் விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால், வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.
எம்.கே.பி.நகர்
சென்னை எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் ஹித்தேஷ், 26, ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது பெற்றோர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு சென்றிருந்தனர். ஓரினச்சேர்க்கை ஆர்வலரான ஹித்தேஷ், 'கிரைண்டர்' செயலி வாயிலாக, நேற்று முன்தினம் இரவு, 35 வயது ஆண் ஒருவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அந்த நபர் ஹித்தேஷ் வீட்டிற்கு வந்ததும், சற்று நேரத்தில் அதே வயதுடைய இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆட்டோவில் வந்துள்ளனர்.
அவர்கள், ஹித்தேசை மிரட்டி, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று கட்டிப்போட்டனர். பின், பீரோவில் இருந்த, 31 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
நீண்ட நேரமாக வீடு அடைக்கப்பட்டு இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர் கதவை தட்டியுள்ளனர். அப்போது ஹித்தேசின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தவர் உதவியுடன் ஹித்தேஷை மீட்டனர்.
திருப்போரூர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வெளிச்சை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 53; கொத்தனார். மனைவி இறந்து விட்டதால், தனியாக வசிக்கிறார்.
வீட்டை பூட்டி, அதன் சாவியை மாடிப்படிக்கு கீழே வைத்து, வேலைக்கு சென்றுள்ளார். மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பூட்டு உடைக்கப்படாமல் சாவி வாயிலாக திறந்து திருட்டு நடந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து 216 சவரன் தங்கம், 4 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -