/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓமந்துாராரில் 10 ஆண்டில் 25,500 இதய சிகிச்சை
/
ஓமந்துாராரில் 10 ஆண்டில் 25,500 இதய சிகிச்சை
ADDED : செப் 28, 2024 12:10 AM

சென்னை, உலக இதய நல தினத்தையொட்டி, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், டாக்டர்கள், நர்ஸ்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இது குறித்து, மருத்துவமனை இயக்குனர் மணி கூறியதாவது:
இம்மருத்துவமனையில், 10 ஆண்டுகளில், இதய இடையீட்டு சிகிச்சை பிரிவில், 25,500 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு, ரத்த நாளங்கள் வாயிலாக, இதய பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்களுக்கும், இதய துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும், 'எலக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி, அப்ளேசன்' என்ற சிகிச்சைகள், 226 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மகா தமனி வால்வு மாற்ற சிகிச்சை 6 பேருக்கும், இதய குழாய் துவாரங்களை அறுவை சிகிச்சையின்றி அடைக்கும் ஏ.எஸ்.டி., சிகிச்சை 276 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதய மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடைய செய்யும், பி.டி.எம்.சி., சிகிச்சையில் 519 பேரும், மகாதமனி கிழிசலை சரி செய்யும், ஆர்.எஸ்.ஓ.வி., சிகிச்சையில், 11 பேரும் பயன்பெற்றுள்ளனர். 73 வயது விவசாயி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையை, ஐரோப்பிய சுகாதார இதழ் பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் செசிலி மேரி மெஜல்லா கூறுகையில், ''கொரோனா தொற்றுக்கு பின், 5 சதவீதம் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் இளைஞர்களும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,'' என்றார்.