UPDATED : செப் 27, 2026 11:27 PM
ADDED : செப் 27, 2026 10:53 PM
தாம்பரம்:முடிச்சூர் பகுதியில், ஆவின் பால் கடை, மளிகை கடை, மெடிக்கல் ஷாப் ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து பணம் திருடிய வழக்குகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பீர்க்கன்காரணை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முடிச்சூரில், 18 மற்றும் 21ம் தேதிகளில், கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட தரமணியைச் சேர்ந்த அமிர்தராஜ், 20, பெருங்குடி தம்பித்துரை, 24, கோவிலம்பாக்கம் புருஷோத்தமன், 32, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், மணிமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ள கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கிலும், ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட தம்பித்துரை மீது, ஏற்கனவே 14 வழக்குகளும், புருஷோத்தமன் மீது, 7 வழக்குகளும், அமிர்தராஜ் மீது ஒரு வழக்கும் இருப்பது தெரியவந்தது.
