ADDED : செப் 06, 2026 04:43 AM
மணலி: மணலி, காமராஜர் சாலையில், 300 மீட்டருக்குள் செயல்படும் மூன்று 'டாஸ்மாக்' கடைகளால் அதிருப்தியடைந்துள்ள அப்பகுதி மக்கள், அவற்றை இடமாற்றம் செய்ய, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணலி, சி.பி.சி.எல்., சந்திப்பு தொடங்கி மாத்துார் சந்திப்பு வரையிலான, ஒரு கி.மீ., துார காமராஜர் சாலையில், மாநகர பேருந்து உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் மீனாட்சி தியேட்டர் எதிரே, அங்கிருந்து 150 மீட்டரில் மணலி சந்தை சந்திப்பு, 100 மீட்டரில் பெட்ரோல் பங்க் அருகே என, மூன்று 'டாஸ்மாக்' கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மணலியின் பிரதான சாலையில் 300 - 400 மீட்டர் தொலைவிற்குள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மூன்று மதுக்கடைகள் செயல்படுவது, பெண்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மது போதையில் கலாட்டாவில் ஈடுபடும் 'குடி'மகன்களால், பெண்கள், சிறுமியர் மற்றும் மணலி மக்கள், அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர்.
இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற, டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
