/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை
/
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை
ADDED : டிச 03, 2025 05:14 AM

நீலாங்கரை: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலாங்கரையைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45. இவரது நண்பர், கே.கே.நகரைச் சேர்ந்த வெற்றி, 43; இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகின்றனர்.
பச்சையப்பனுக்கு வேலுாரில் உள்ள இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறி, சங்கர் என்பவரிடம், வெற்றி 'அட்வான்ஸ்' வாங்கி உள்ளார்.
இதை பச்சையப்பனிடம் கூறவில்லை. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில், பச்சையப்பனிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வெற்றி, கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை நீலாங்கரையில் வைத்து பச்சையப்பனை காரில் கடத்திச் சென்றனர்.
பூந்தமல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அறிந்த பூந்தமல்லி போலீசார், அங்கு சென்று பச்சையப்பனை மீட்டனர். அங்கிருந்த மூன்று பேரை கைது செய்து, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கோட்டூரைச் சேர்ந்த ஜோசப், 52, தீபக் ஜான், 43, முத்துக்குமார், 48, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தலா ஒரு கார், ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
பச்சையப்பனின் காருடன் தலைமறைவான வெற்றி உட்பட மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

