/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமாபுரம் விபத்து மெட்ரோ கர்டர் விழுந்த விவகாரம் 4 இன்ஜினியர்கள் பணி நீக்கம்
/
ராமாபுரம் விபத்து மெட்ரோ கர்டர் விழுந்த விவகாரம் 4 இன்ஜினியர்கள் பணி நீக்கம்
ராமாபுரம் விபத்து மெட்ரோ கர்டர் விழுந்த விவகாரம் 4 இன்ஜினியர்கள் பணி நீக்கம்
ராமாபுரம் விபத்து மெட்ரோ கர்டர் விழுந்த விவகாரம் 4 இன்ஜினியர்கள் பணி நீக்கம்
ADDED : ஜூன் 18, 2025 11:51 PM
சென்னை, ராமாபுரத்தில் மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் ராட்சத 'கர்டர்' விழுந்து வாலிபர் இறந்த விபத்தில், எல் அண்டு டி., நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு இன்ஜினியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சோழிங்கநல்லுார் -- மாதவரம் வழித்தடத்தில் போரூர் - நந்தம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் சேர்ந்து நடந்து வருகின்றன.
இதற்காக, இரண்டு துாண்கள் மத்தியில் 'கர்டர்' எனும் ராட்சத கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை, எல் அண்டு டி., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் ராமாபுரத்தில் அமைக்கப்பட்ட கர்டர் ஒன்று கடந்த 12ம் தேதி சரிந்து சாலையில் பைக்கில் சென்ற ரமேஷ், 43, என்பவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சம்பவ இடத்தில் பணியாற்றிய எல் அண்டு டி., இன்ஜினியர் உட்பட 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை மீதான அறிக்கை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் நேற்று அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை மீது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு ஒப்பந்ததாரருக்கே உண்டு. அவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட நான்கு இன்ஜினியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மெட்ரோ திட்டப்பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர் என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து, ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், இன்ஜினியர்கள், பொதுமக்கள் என 26 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அதிகாரிகள், மெட்ரோ நிர்வாகம்