/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மாணவர்களுக்காக 4 புது அரசு பஸ் இயக்கம்
/
பள்ளி மாணவர்களுக்காக 4 புது அரசு பஸ் இயக்கம்
ADDED : ஜூன் 19, 2025 12:28 AM

சென்னை, சென்னை மாநகராட்சி சார்பில், 206 தொடக்க பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 46 உயர்நிலை மற்றும் 35 மேல்நிலை பள்ளிகள் என, மொத்தம் 417 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 3,879 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
நடப்பு, 2025 - -26ம் கல்வியாண்டில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 21,734 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இவர்களில் நீண்ட துாரம் பயணம் செய்யும் மாணவ - மாணவியர் வசதிக்காக, 1.11 கோடி ரூபாயில், நான்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. இதை, முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் துவக்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில், தலா ஒரு ஓட்டுநர், ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில், தண்டையார்பேட்டை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 23 மாணவ - மாணவியர், புத்தா தெருவில் உள்ள மேல்நிலை பள்ளியை சேர்ந்த 44 பேர், புதிய மற்றும் பழைய நப்பாளையம் பள்ளியை சேர்ந்த 70 பேர், குளக்கரை பள்ளியை சேர்ந்த 16 பேர், ஆண்டார் குப்பத்தை சேர்ந்த 80 பேர், காமராஜர் அவென்யூ சேர்ந்த 40 பேர், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த 100 பேர் என, மொத்தம், 373 மாணவ - மாணவியர் இந்த பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இதன் வாயிலாக, நீண்ட துாரத்தில் உள்ள மாணவ - மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்வதுடன், அவர்களின் கல்வித்தரம் மேம்படும் என, அதிகாரிகள் கூறினர்.