/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் 3 இடங்களில் விபத்து தந்தை, மகன் உட்பட 4 பேர் பலி
/
மணலியில் 3 இடங்களில் விபத்து தந்தை, மகன் உட்பட 4 பேர் பலி
மணலியில் 3 இடங்களில் விபத்து தந்தை, மகன் உட்பட 4 பேர் பலி
மணலியில் 3 இடங்களில் விபத்து தந்தை, மகன் உட்பட 4 பேர் பலி
ADDED : நவ 04, 2024 04:30 AM

திருவொற்றியூர்:வெவ்வேறு இடங்களில் நேற்று நிகழ்ந்த, சாலை விபத்துகளில், தந்தை - மகன் உட்பட நால்வர் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
மணலிபுதுநகர், வெள்ளிவாயல் சாவடியைச் சேர்ந்தவர் கிரண், 23. இவரது நண்பர் வினோத், 23.
இருவரும் நேற்று மதியம், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் இருந்து, வெள்ளிவாயல்சாவடி நோக்கி, 'யமஹா பேசினோ' ஸ்கூட்டரில் சென்றனர்.
மணலி விரைவு சாலை, சத்தியமூர்த்தி நகர் - பகிங்ஹாம் கால்வாய் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, சட்டென ஸ்கூட்டரை திருப்பியபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஸ்கூட்டரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த வினோத், நிலை தடுமாறி விழுந்ததில், தண்ணீர் லாரியின் சக்கரம், அவர் மீது ஏறி இறங்கி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். கிரணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வினோத் உடலை மீட்டு, டேங்கர் லாரி ஓட்டுனரான, தண்டையார்பேட்டை ராஜ்குமார், 27, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், திருவொற்றியூர், ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் முகமது அலி, 29; 'ஏசி' மெக்கானிக்.
நேற்று மதியம், தன 'யமஹா ரே' ஸ்கூட்டரில், மணலி, எம்.எப்.எல்., சந்திப்பில் இருந்து, மாதவரம் விரைவு சாலை நோக்கி, சென்றுக் கொண்டிருந்தார்.
அதே திசையில், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வரப்பட்ட, 40 அடி நீள கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், முகமது அலிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்டெய்னர் லாரி ஓட்டுனர் சசிகுமார், 46, என்பவரை, செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம், எண்ணுார், வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற டேனியல், 40; பெயின்டர். இவரது மனைவி ஸ்டெல்லா ராணி, 35. மகன் மோசஸ், 12; அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தார். மகள் ஸ்வீட்டி, 7.
டேனியல், அம்பத்துாரில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று, நேற்று மதியம், தன் 'டி.வி.எஸ்., - ஜூபிட்டர்' ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மணலி விரைவு சாலை, சாத்தாங்காடு காவல் நிலையம் எதிரே, அணுகு சாலையில் நின்றுக் கொண்டிருந்த, 20 அடி நீள கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி, ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானது.
இதில், டேனியல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோசஸ், ஸ்டெல்லா ராணி மற்றும் ஸ்வீட்டி ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, சிறுவன் மோசஸை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
ஒரே நாளில், அடுத்தடுத்து மூன்று சாலை விபத்துகளில், தந்தை - மகன் உட்பட நால்வர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.