/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் விற்ற பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி மகன் உட்பட 4 பேர் கைது
/
போதை பொருள் விற்ற பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி மகன் உட்பட 4 பேர் கைது
போதை பொருள் விற்ற பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி மகன் உட்பட 4 பேர் கைது
போதை பொருள் விற்ற பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி மகன் உட்பட 4 பேர் கைது
ADDED : அக் 06, 2025 02:57 AM

சென்னை: இரவு விருந்து, கல்லுாரி மாணவர் விடுதிகள் மற்றும் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்து வந்த, தமிழக பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர போலீசில் செயல்படும், ஏ.என்.ஐ.யு., எனும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, சூளைமேடு பகுதியில், கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய், போதை மாத்திரைகளுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏ.என்.ஐ.யு., மற்றும் சூளைமேடு போலீசார் இணைந்து, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப், 26, பள்ளிக்கரணை ஜனார்த்தனன், 27, கீழ்கட்டளை பூர்ணசந்திரன், 21, பூந்தமல்லி அப்துல்வாசிம், 22, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
இவர்களில் பூர்ணசந்திரன், தமிழக பா.ஜ., மகளிர் அணியின் முன்னாள் நிர்வாகி உமா ராணியின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
நான்கு பேரிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் மற்றும் 2.60 லட்சம் ரூபாய், ஆறு மொபைல் போன்கள், ஐந்து எடை இயந்திரம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பிரதாப், 'யு டியூப்' சேனல் நடத்துகிறார். டிஜிட்டல் மார்க்கெட் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார். ஜனார்த்தனன், வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் வாயிலாக பணியாற்றி, பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்றில், மாதம், 80,000 ரூபாய் ஊதியம் பெற்று வந்தார்.
பூர்ணசந்திரன், தனியார் கல்லுாரி ஒன்றில், பி.பி.ஏ., படித்து வருகிறார். அப்துல்வாசிம், எம்.பி.ஏ., படித்து வருகிறார்; ரெஸ்டாரன்ட் ஒன்றில் பகுதி நேரமாக மேலாளர் பணியும் செய்து வந்தார்.
இவர்கள் நால்வரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக சந்தித்து உள்ளனர். அதன் அடிப்படையில் கூட்டு சேர்ந்து, குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என, இரவு விருந்து நடக்கும் இடங்கள், கல்லுாரி விடுதிகள், மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.