/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் 44 ரயில்கள் ரத்து! வரும் 20ம் தேதி முதல் 45 நாள் திண்டாட்டம்தான் எழும்பூர் நிலைய மறு சீரமைப்புக்காக மாற்றம்
/
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் 44 ரயில்கள் ரத்து! வரும் 20ம் தேதி முதல் 45 நாள் திண்டாட்டம்தான் எழும்பூர் நிலைய மறு சீரமைப்புக்காக மாற்றம்
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் 44 ரயில்கள் ரத்து! வரும் 20ம் தேதி முதல் 45 நாள் திண்டாட்டம்தான் எழும்பூர் நிலைய மறு சீரமைப்புக்காக மாற்றம்
கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் 44 ரயில்கள் ரத்து! வரும் 20ம் தேதி முதல் 45 நாள் திண்டாட்டம்தான் எழும்பூர் நிலைய மறு சீரமைப்புக்காக மாற்றம்
UPDATED : பிப் 18, 2026 07:44 AM
ADDED : பிப் 18, 2026 06:20 AM

சென்னை: 'எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்களின் சேவையில், வரும் 20 முதல் ஏப்., 5 வரை, 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடத்தில், 44 மின்சார ரயில்களின் சேவை ரத்தாவதால், பயணியருக்கு பெரும் திண்டாட்டமாக மாறிவிடும். பயணியர் அதற்கேற்ப, பயண திட்டத்தை மாற்றிக் கொள்வது அவசியம்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் தினமும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும், 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில், 734.91 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள், 2023 பிப்ரவரியில் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகின்றன. ரயில்வே கட்டட அடித்தள பணிகள் முடிந்துள்ளன.
இதேபோல், உள்பகுதிகளில் நடைமேம்பாலம் இணைப்பு, வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடற்கரை - செங்கல்பட்டு தடத்திலும், வரும் 20ம் தேதி முதல் ஏப்., 5 வரை புதிய மாற்றங்கள் செய்து, தற்காலிக கால அட்டவணை மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், தற்போது இயக்கப்படும் 208 ரயில்களுக்கு, பதிலாக, 164 ரயில் சேவைகளாக இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் அளித்த பேட்டி:
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக, நடைமேடை 10, 11ல் இருந்து புறநகர் மின்சார ரயில்கள், வரும் 20 தேதி நள்ளிரவு முதல் ஏப்., 5 வரை, நடைமேடை 5, 6ல் இருந்து இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் இயக்கப்படும் 6வது நடைமேடையிலும்; செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், 5வது நடைமேடையிலும் இயக்கப்படும்.
இதற்காக, திருத்தப்பட்ட தற்காலிக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, அதன்படி, வரும் 20ம் தேதி முதல் ஏப்., 5 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார ரயில் எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன், 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து, 84 ரயில்களும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து 80 ரயில்கள் இயக்கப்படும். இதில் 11 ரயில்கள் கடற்கரை - எழும்பூர் வரை, இருமார்க்கத்திலும் இயக்கப்படும். அதேசமயம் 'ஏசி' மின்சார ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் தடத்தில், பாதுகாப்பு சோதனை முடிந்த பின், மார்ச் இறுதியில் ரயில் சேவை துவங்கும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 44 ரயில்களின் சேவை குறைக்கப்படுகிறது. மேம்பாட்டு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டாலும், பயணியருக்கு பெரும் திண்டாடத்தை ஏற்படுத்தும்.

