ADDED : அக் 29, 2024 12:24 AM

அனகாபுத்துார்,
அனகாபுத்துாரில் இயற்கை நார் நெசவு குழுமம் இயங்கி வருகிறது. இக்குழுமத்தினர், வாழை, கற்றாழை, மூங்கில் போன்ற இயற்கை நார்களில் இருந்து புடவை, சட்டை, பை, பேன்ட் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர்.
இந்த பொருட்கள், தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இக்குழுமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நெசவாளர் சேவை மையத்தின் வாயிலாக, 45 நாள் சிறந்த தொழில் பயிற்சி முகாம், நேற்று துவங்கியது. நெசவு, ஆடைகளுக்கு சாயமிடுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெசவாளர் சேவை மையத்தைச் சேர்ந்த ஹரிஹரன், காஞ்சிபுரம் வட்டார கைத்தறி துணிநுால் துறையைச் சேர்ந்த மோகன் ஆகியோர் துவக்கினர்.
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்போருக்கு தினம் 300 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் சான்று வழங்கப்படும்.

