ADDED : மே 26, 2025 03:14 AM
சென்னை:சென்னை மாநகராட்சியில், 200 சுகாதார ஆய்வாளர்கள், 60 சுகாதார அலுவலர்கள் இருக்க வேண்டும். இவர்களில், 92 சுகாதார ஆய்வாளர்கள், 49 சுகாதார அலுவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள், 2019ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்பின், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணியிட மாற்றம் செய்யப்படவில்லை.
அதிக ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்ததால், நிர்வாக குளறுபடி ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, கடந்த மாதம் சுகாதார ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு திருத்த சட்டத்தை பயன்படுத்தி, சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர். இந்நிலையில், 49 சுகாதார அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், மூன்று வட்டார துணை கமிஷனர் அலுவலகங்கள் உள்ளன. ஏற்கனவே அந்தந்த வட்டாரத்தில் பணிபுரிந்தோர், அதே வட்டாரத்தில் உள்ள இதர மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சுகாதார ஆய்வாளர்கள் இடமாற்றத்தின் போது குளறுபடி ஏற்பட்டதால், இரண்டு இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதுபோன்ற குளறுபடி, சுகாதார அலுவலர்கள் இடமாற்றத்தில் ஏற்படாததால், அவர்கள் நிம்மதி அடைந்தனர்.