58 ஆபத்தான மின்பகிர்மான பெட்டிகள்: கணக்கெடுப்பு பணியில் கண்டுபிடிப்பு
58 ஆபத்தான மின்பகிர்மான பெட்டிகள்: கணக்கெடுப்பு பணியில் கண்டுபிடிப்பு
UPDATED : செப் 16, 2026 09:06 PM
ADDED : செப் 16, 2026 08:43 PM

சோழிங்கநல்லூர்: சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, ஆபத்தான மின் பகிர்மான பெட்டிகள் மற்றும் சேதமடைந்த மின் கேபிள்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
தென் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், சோழிங்கநல்லூர் மண்டலம் வழியாக சென்று, முட்டுக்காடு கடலில் சேர்கிறது. இதனால், தொடர் கனமழை பெய்தால், இதர பகுதிகளை விட, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இந்த மண்டலத்தில், கடந்தாண்டு பருவமழையின் போது சேதமடைந்த மின் கேபிளில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார். தாழ்வான பின் பகிர்மான பெட்டிகளில் இருந்தும் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் பலியாகின.
அதுபோன்ற சம்பவங்கள், வரும் பருவ மழையில் ஏற்படாமல் இருக்க தாழ்வான, சேதமடைந்த மின்பகிர்மான பெட்டிகள் மற்றும் மின் கேபிள்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தன.
மின் பகிர்மான பெட்டிகள் குறித்து மாநகராட்சியும், சேதமடைந்த கேபிள்கள் குறித்து மின்சார வாரியமும் கணக்கெடுத்தது. நீலாங்கரையில் அதிக தெருக்களில் மின் கேபிள்கள் சேதமடைந்துள்ளது தெரிந்தது. மண்டலத்தில், 58 மின் பகிர்மான பெட்டிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது கண்டறியப்பட்டன.
இந்த மின் பகிர்மான பெட்டிகள் மற்றும் சேதமடைந்த கேபிள்கள், பருவமழைக்கு முன் மாற்றி அமைக்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.
