/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
59 இடங்களுக்கு வழிகாட்டி பலகைகள் இல்லாமல்...தடுமாற்றம் : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திணறல்
/
59 இடங்களுக்கு வழிகாட்டி பலகைகள் இல்லாமல்...தடுமாற்றம் : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திணறல்
59 இடங்களுக்கு வழிகாட்டி பலகைகள் இல்லாமல்...தடுமாற்றம் : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திணறல்
59 இடங்களுக்கு வழிகாட்டி பலகைகள் இல்லாமல்...தடுமாற்றம் : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திணறல்
ADDED : மார் 31, 2025 02:00 AM

வண்டலுார்:செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் முதல், சென்னை, மீஞ்சூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில், 59 இடங்களில் சரியான இடத்திற்குச் செல்லும்படி வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கும், தடுமாற்றத்திற்கும் ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகரின் உட்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதற்கு தீர்வாக, சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் துரிதமாக செல்லவும், தென் மாவட்டங்களிலிருந்து அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக பயணிக்கவும், வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்க, கடந்த 2010 ஆகஸ்ட் மாதம் பணிகள் துவக்கப்பட்டன.
இதற்கான பணிகள், திட்டம் - 1, திட்டம் - 2 என, இரண்டு கட்டங்களாக துவக்கப்பட்டன.
திட்டம் - 1க்கு, 1,081 கோடி ரூபாய், திட்டம் 2க்கு, 1,075 கோடி ரூபாய் என, மொத்தம் 2,156 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 2014 ஆகஸ்டில் இந்த வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
நீண்ட துார பயணம்
வண்டலுாரில் துவங்கும் இந்த வெளிவட்ட சாலையிலிருந்து மண்ணிவாக்கம், முடிச்சூர், அம்பத்துார், ஆவடி, பூந்தமல்லி என, 59 இடங்களுக்குச் செல்ல, பிரதான சாலையிலிருந்து அணுகுசாலைகள் பிரிந்து செல்கின்றன.
ஆனால், இந்த 59 அணுகுசாலைகளில் இடங்களைப் பற்றிய எவ்வித வழிகாட்டி பலகைகளும் இல்லை. இதே போல், அணுகுசாலைகளில் இருந்து வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கு வரும் போதும், சரியான வழிகாட்டி பலகைகள் இல்லாமல், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
இதனால், புதிதாக இந்த வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சரியாக செல்ல முடியாமல், நீண்ட துாரம் பயணிக்கின்றனர்.
அதன் பின், யாரிடமாவது விசாரித்து, திரும்பி பெரும் மன உளைச்சலுடன் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணிக்கின்றனர்.
இதனால் நேர விரயம், எரிபொருள் விரயம் மட்டுமின்றி, கடும் மன உளைச்சலுக்கு வாகன ஓட்டிகள் ஆளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னையை தீர்க்க, அணுகுசாலை துவங்கும் இடங்களில், சரியான இடங்களைக் குறிப்பிடும் வகையில், வழிகாட்டி பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எந்த பயனும் இல்லை
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பல நுாறு கோடி ரூபாயை செலவழித்து, வெளிவட்ட சாலையை அமைத்துள்ள தமிழக அரசு, சில ஆயிரம் ரூபாய் செலவில், வாகன ஓட்டிகள் கண்ணில் தெரியும்படி, வழிகாட்டி பலகைகள் அமைத்திருக்க வேண்டும்.
அணுகுசாலை ஓரத்தில் சிறிய பலகைகளில், 'எக்சிட்', 'என்ட்ரி' என, ஆங்கிலத்தில் மட்டும் ஆங்காங்கே சிறிய அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால், எந்த ஊருக்கு செல்லும் வழி என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை.
சில இடங்களில் மட்டும், மிகச் சிறிய வழிகாட்டி பலகைகளில், கண்களுக்கு புலப்படாத இடத்தில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றால், வாகன ஓட்டிகளுக்கு எந்த பயனும் இல்லை.
வண்டலுாரிலிருந்து வெளிவட்ட சாலை வழியாக அம்பத்துார் செல்லும் ஒருவர், எந்த இடத்தில் உள்ள அணுகுசாலையில் திரும்ப வேண்டும் என்ற விபரம் இல்லை.
மன உளைச்சல் அதிகம்
இதனால், ஒரு அணுகு சாலையில் திரும்பி, அங்கு உள்ளவர்களிடம் விபரம் கேட்டு, சரியான வழியில் செல்ல காலதாமதம் ஏற்படுவதால், மன உளைச்சலும் அதிகமாகிறது.
இந்த சாலையில், 100 கி.மீ., வேகத்தில் பயணிக்க அனுமதி உள்ளது.
இந்த வேகத்தில் ஒரு கார் பயணிக்கும் போது, அடுத்ததாக வரும் அணுகுசாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்ற வழிகாட்டி பலகை, 100 மீ., துாரத்திற்கு முன்பாகவே அமைக்க வேண்டும். அதுவும், வாகன ஓட்டியின் கண்ணில் தெளிவாக தெரியும்படி, பெரிதாக அமைக்க வேண்டும்.
தெளிவான வழிகாட்டி பலகைகள் இல்லாததால், 'கூகுள்' வரைபடத்தை பார்த்தவாறே வாகனம் ஓட்ட வேண்டி உள்ளது. இதனால், கவனம் சிதறி, விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, பல நுாறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் தெரியும்படி, தெளிவான வழிகாட்டி பலகைகள் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.