ADDED : மார் 09, 2026 05:38 AM

வடக்குகடற்கரை: பாரிமுனையில், 'ஹவாலா' பணத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
பாரிமுனை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வடக்கு கடற்கரை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே பகுதி ஈவினிங் பஜாரில், ஐந்து வாலிபர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும், அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், தண்டையார்பேட்டை, துர்கா தேவி நகரைச் சேர்ந்த முகிலன், 21, அஜய், 26, முருகேஷ், 29, அமிது, 21, பாஸ்கர், 19, எனவும் தெரிய வந்தது.
இவர்கள், பர்மா பஜாரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லும் வேலையை பார்த்து வரும், பெரியமேடு பகுதியைச் சேர்ந்த முகமது மொய்தீன், 37, என்பவரை தாக்கி, பணத்தை கொள்ளையடிக்க இருந்தது தெரிந்தது.
தொடர் விசாரணையில், அதற்கு திட்டம் போட்டு, நாடகத்தை அரங்கேற்ற இருந்தது முகமது மொய்தீன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ஆறு பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
