/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணையில் 60,000 பறவைகள் முகாம்
/
பள்ளிக்கரணையில் 60,000 பறவைகள் முகாம்
ADDED : பிப் 10, 2025 03:24 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலைத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு ஜனவரில், 60,234 பறவைகள் வருகை புரிந்தது, கணக்கெடுப்பு வாயிலாக உறுதியாகி உள்ளது.
சென்னையில் வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. ஆக்கிரமிப்புகள், கழிவுகள் கொட்டப்படுவது போன்ற பாதிப்புகளை கடந்து, சூழலியல் தன்மையை பாதுகாக்க, வனத்துறை பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மழைக்காலத்தில், தென் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர், சதுப்பு நிலத்தில் உள் வாங்கப்பட்டு, ஒக்கியம் மடுவு, பஹிங்காம் கால்வாய் வாயிலாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த இயற்கை அமைப்பை பாதுகாப்பது, மனிதர்களுக்கு மட்டுமின்றி, இதை நம்பி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகளுக்கும் பேருதவியாக உள்ளது.
பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகம் நோக்கி வரும் பறவைகளில் பெரும்பாலானவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகின்றன. குறிப்பாக, உவர் நீர் பகுதிகளில் உணவு தேடும் பறவைகள், பள்ளிக்கரணைக்கு வருவது படிப்படியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக உள்ளான், மண் கொத்தி, வாத்து போன்ற வகைகளை சேர்ந்த வலசை பறவைகள், இங்கு அதிகமாக முகாமிடுகின்றன.
இதுகுறித்து, இங்கு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
வனத்துறையுடன் இணைந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், தொடர்ந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த, 2019ம் ஆண்டு இங்கு, ஒரே மாதத்தில், 41,000 பறவைகள் வருகை பதிவு செய்யப்பட்டதுதான் பெரிய எண்ணிக்கையாக இருந்தது.
இதை முறியடிக்கும் வகையில், ஜனவரியில், 117 வகையை சேர்ந்த, 60,234 பறவைகள் வருகை புரிந்தது கணக்கெடுப்பில் தெரியவந்தது. கடந்த, 15 ஆண்டுகளில் இந்த அளவு அதிக பறவைகள் வந்தது இதுதான் முதல் முறை.
இதில் சிறிய கொசு உள்ளான், பொரி மண் கொத்தி, நீலசிறகு வாத்து, பவளக்கால் உள்ளான், ஊசிவால் வாத்து ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. மிக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பறவைகள் வருகை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மை சிறப்பாக உள்ளதை உறுதிபடுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

