/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைப்பு திட்டம்: நீர் தேங்கும் பகுதிகளில் குடியிருப்புக்கு தடை
/
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைப்பு திட்டம்: நீர் தேங்கும் பகுதிகளில் குடியிருப்புக்கு தடை
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைப்பு திட்டம்: நீர் தேங்கும் பகுதிகளில் குடியிருப்புக்கு தடை
வெள்ள பாதிப்பை தடுக்க 65 ஏரிகள் இணைப்பு திட்டம்: நீர் தேங்கும் பகுதிகளில் குடியிருப்புக்கு தடை
ADDED : ஏப் 27, 2024 12:10 AM

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள, 65 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, இணைக்கப்பட உள்ளன. அதேபோல், சென்னை மாநகரில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்த, 'சர்வே' எண்ணுடன் பட்டியல் வெளியிட, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும், வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, கடந்த 2015, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில், வெள்ள நீரால் அதிக அளவு சென்னை பாதிக்கப்பட்டது.
சென்னையை பொறுத்தவரை, அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும், 8,000 கோடி ரூபாய்க்கு மேல், மழைநீர் வடிகால் கட்டமைப்பிற்கு செலவிடப்பட்டு உள்ளது.
அதேபோல் கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலையாறு ஆகியவற்றை துார்வாரும் பணிக்காகவும், அவ்வப்போது 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது.
இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டும், சென்னை மாநகராட்சியில் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு காண முடியாத நிலை தொடர்கிறது.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த கமிட்டி சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் என வகைப்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான செயல் திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின்படி, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், குறுகிய கால திட்டத்திற்கு மட்டுமே, தமிழக அரசு செலவிட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பிற்கு தீர்வு ஏற்படுத்துவது குறித்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய், சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, கடந்த 2023ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கான காரணம் குறித்த ஆவணங்களை, பகுதி வாரியாக தலைமை செயலர் ஆய்வு செய்தார்.
ஆலோசனைக் கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், 2015ம் ஆண்டில் இருந்து 2023 வரை ஒப்பிட்டால், சில ஆண்டுகள் வெள்ள பாதிப்பு இருந்துள்ளது. மற்ற ஆண்டுகளில், வறட்சி தான் நிலவியது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, வடிநில பகுதியாக சென்னை திகழ்கிறது. அம்மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு, பகிங்ஹாம் வாயிலாக கடலில் கலக்கிறது. இதனால், சென்னை வெள்ளக்காடாக மாறுவதை தடுப்பது சவாலானது.
அதேநேரம், சென்னையில் பெரிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் இருப்பதால், வீணாக கடலில் கலந்து, கோடை காலத்தில் நான்கு மாவட்டங்களிலும் வறட்சியை ஏற்படுத்துகிறது.
இந்த வறட்சியை தவிர்க்கும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு நீர் வரத்து உள்ள 65 ஏரிகள் இணைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு ஏரியையும் அகலப்படுத்த முடியாத சூழல் இருப்பதால், அவற்றை ஆழப்படுத்தி, ஒன்றுடன் ஒன்று இணைத்து, மழைநீர் சேமிக்கப்பட உள்ளது. இந்த ஏரிகள் நிரம்பிய பின்னரே அடையாறு, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி வாயிலாக உபரிநீர் கடலில் கலக்கும்.
குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஒக்கியம் சாலையின் காரப்பாக்கம் பகுதியில், மேற்கு பகுதி குறுகிய நிலையில், கிழக்கு பகுதி அகலமாக காணப்படுகிறது.
இதுபோன்ற இடங்களில் கால்வாய்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, தடையின்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்படும்.
அத்துடன், கடந்த 15 ஆண்டுகளில், சென்னையில் எந்தெந்த இடங்களில், எவ்வளவு அளவு மழைநீர் தேங்கியது என்ற விபரங்கள், 'சர்வே' எண்ணுடன் வெளியிடப்படும்.
இதன் வாயிலாக, திறந்தவெளி இடங்களை வாங்கி வீடு கட்டுவோர், அந்த பகுதியில் எந்த அளவிற்கு மழைநீர் தேங்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன், மழைநீர் தேங்கும் பகுதிகளில், தரைதளத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்படாது. அங்கு தரைதளத்தில் வாகன நிறுத்தத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
அப்போது தான், மழை வெள்ளம் பாதித்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது. வடசென்னைக்கு திருவள்ளூர் பகுதியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வருகிறது. அங்கும், மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்திற்கு
உத்தேசமாக 1,000 கோடி ரூபாய் வரை மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான விரிவான திட்ட மதிப்பீடு செய்து, ஆறு மாதங்களுக்குள் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

