ADDED : செப் 28, 2024 12:40 AM
சென்னை, சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆறு ஆண்டுகளுக்கு முன், தாழ்தள பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது.
இதனால், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களது நலன் கருதி, மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. நீதிமன்றமும் மீண்டும் தாழ்தள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதற்கட்டமாக கடந்த மாதம் 58 பேருந்துகளின் சேவை துவக்கப்பட்டது.
பேருந்துகளின் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ., குறைத்து, பயணியர் ஏறிய பின் பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என, பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 11 வழித்தடங்களில், 66 புதிய தாழ்தள பேருந்துகள், நேற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளன.