/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாறுமாறாக ஓடிய கார் மோதி 7 பேருக்கு படுகாயம்
/
தாறுமாறாக ஓடிய கார் மோதி 7 பேருக்கு படுகாயம்
ADDED : அக் 20, 2024 12:21 AM

சென்னை, வேப்பேரி, ஈ.வெ.ரா., சாலை - ரித்தர்டன் சாலை சந்திப்பில், நேற்று மாலை 4:00 மணிக்கு, தாறுமாறாக அதிவேகமாக சென்ற 'இன்னோவா' கார், அவ்வழியாக சென்ற 'மகேந்திரா' கார், இரு ஆட்டோ, இரு பைக் மீது மோதியது. இதில், சினிமா காட்சியில் பறப்பது போல், அந்த வாகனங்கள் சிறிது துாரம் பறந்து விழுந்தன.
விபத்தை ஏற்படுத்திய 'இன்னோவா' கார் நிற்காமல் சென்றதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், விடாமல் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
பைக்கில் சென்ற வண்ணாரப்பேட்டை லோகேஷ், 43, என்பவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதே விபத்தில் மற்றொரு பைக்கில் வந்த கொண்டித்தோப்பு சுலேகா மஜ்ஜி, 32, அவரது மகன்கள் அரியன் மஜ்ஜி, 8, மனீஷ் மஜ்ஜி, 13, ஆகியோருக்கு இடது தோல்பட்டையில் எலும்பு முறிந்துள்ளது.
பெரியமேடு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக், 38, என்பவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணித்த ஓட்டேரியைச் சேர்ந்த சிறுமி அபிபுல் நிஷா, 13, என்பவருக்கு வலது காலில் எலும்பு முறிந்துள்ளது.
மற்றொரு ஆட்டோவில் பயணித்த, ஓட்டேரியைச் சேர்ந்த பர்வீன், 28, இடது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சம்பவம் குறித்து, அண்ணா சதுக்கம் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, அரும்பாக்கம், என்.எஸ்.கே.,நகர், 22வது தெருவைச் சேர்ந்த ரமணி, 60, என்பவரை பிடித்து கைது செய்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரில் உகாண்டா துாதரக கொடி இருந்தது குறிப்பிடத்தக்கது.