/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
779 கூழைக்கடா பறவைகள் பள்ளிக்கரணையில் முகாம்
/
779 கூழைக்கடா பறவைகள் பள்ளிக்கரணையில் முகாம்
ADDED : அக் 27, 2024 12:26 AM

சென்னை, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பல்வேறு அரிய வகை பறவைகள் சென்னை பள்ளிக்கரணைக்கு வந்துவிட்டன.
அந்த வகையில் அழிவின் விளிம்புக்கு அருகில் உள்ளவை என, சர்வதேச அளவில் வகைபடுத்தப்பட்ட கூழைக்கடா பறவைகள் வருகை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கம் என்ன?
இதுகுறித்து, திருச்சி நேஷனல் கல்லுாரி விலங்கியல் துறை பேராசிரியரும், கூழைக்கடாக்கள் ஆராய்ச்சியாளருமான வி.கோகுலா கூறியதாவது:
தமிழகத்தில் கூழைக்கடா பறவைகளின் வருகை, கடந்த 2000 ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழகம் வரும் கூழைக்கடாக்கள், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டு, குஞ்சு பொரிப்பது வழக்கமாக இருந்தது.
அங்குள்ள நீர்க்கரம்பை மரங்களின் மேல் பகுதியில், கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம். அங்கு, இவற்றின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அருகில் உள்ள கரிக்கிலி பகுதியிலும் தங்க ஆரம்பித்தது.
இதன் அடுத்த கட்டமாக, தற்போது சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கூழைக்கடா பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
உலகம் முழுதும் கூழைக்கடா பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சூழல் மேம்பாடு
'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு ஒவ்வொரு வகை பறவையும் தங்களுக்கான வழக்கமான காலத்தில் வந்துள்ளன.
இந்த வகையில், ஆந்திர மாநிலம் நிலப்பட்டு பகுதிதான், கூழைக்கடா பறவைகளுக்கான சரணாலயமாக பார்க்கப்படுகிறது.
அங்கு தற்போதைய நிலவரப்படி, 150 வரையிலான எண்ணிக்கையில்தான் கூழைக்கடாக்கள் வந்துள்ளன. அதேபோன்று, வேடந்தாங்கலுக்கு இன்னும் கூழைக்கடாக்கள் வரவில்லை.
இந்த பின்னணியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், அக்டோபரில், வழக்கமான எண்ணிக்கையைவிட அதிகமாக, 779 கூழைக்கடா பறவைகள் வந்துள்ளன.
இங்குள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள சதுப்பு நிலத்தில், பெரிய முள் மரங்களின் மேற்பகுதியில் தங்கி, இப்பறவைகள் முட்டையிட தயாராகி வருகின்றன.
கடந்த, 2019ல் இங்கு, 770 கூழைக்கடாக்கள் வந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பின் தற்போது தான், 779 கூழைக்கடாக்கள் வந்துள்ளன. பள்ளிக்கரணையின் உயிர் சூழல் மேம்பாட்டுக்கு, இது ஆதாரமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.