/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
900 கிலோ ரேஷன் அரிசி கே.கே.நகரில் பறிமுதல்
/
900 கிலோ ரேஷன் அரிசி கே.கே.நகரில் பறிமுதல்
ADDED : பிப் 16, 2025 04:14 AM

கே.கே.நகர்:எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளம் புகழேந்தி தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து ஒருவர், நேற்று மதியம் ஸ்கூட்டியில் மூன்று மூட்டை ரேஷன் அரிசியை எடுத்து சென்றார்.
மூன்றாவது முறை ஸ்கூட்டியில் ரேஷன் அரிசியை எடுத்து செல்வதை கவனித்த மார்க்.கம்யூ., விருகம்பாக்கம் பகுதி குழு உறுப்பினர் கந்தன் உள்ளிட்டோர், சந்தேகமடைந்து அந்த நபரை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது, கே.கே.நகர் 10வது செக்டாரில் உள்ள வீட்டில், அரிசி மூட்டைகளை அந்த நபர் பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை அங்கேயே மடக்கி பிடித்தனர்.
போலீசார் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் ஆய்வில், 29 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அரிசியை கடத்தியது, எம்.ஜி.ஆர்., நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த சிவா, 23, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.