/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது
/
காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது
காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது
காவல் நிலையம் முன் தீக்குளித்த பட்டறை தொழிலாளி உயிரிழப்பு அவசரமாக வழக்கு பதிந்து ஒருவர் கைது
ADDED : ஜன 22, 2025 12:33 AM

ஆர்.கே.நகர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன், நேற்று முன் தினம் இரவு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பட்டறை தொழிலாளி ராஜன் என்பவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன், 42. இவர் கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் ஸ்டீல் பட்டறை நடத்தி வந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் பட்டறையை மூடினார். பின், கொருக்குப்பேட்டை, அன்பழகன் தெருவில் உள்ள முருகன், 46, என்பவரது பட்டறையில், மூன்று நாட்களாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில், ராஜனுக்கும் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்த கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவன், 46, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்டீல் பட்டறை உரிமையாளர் முருகன், இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்த ராஜன், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில், கொருக்குப்பேட்டை, அண்ணா நகர், வேலன் சத்திரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தார். அப்போது, அங்கு வந்த மாதவனுக்கும், ராஜனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு மது குடிக்க வந்த அருண்குமார் என்பவர், மாதவனுடன் சேர்ந்து ராஜனை தாக்கி உள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த ராஜன், பிற்பகல் 3:45 மணியளவில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வந்து, தன்னை மாதவன் மற்றும் அருண்குமார் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய்மொழி புகார் அளித்துள்ளார்.
அதை பதிவு செய்யாமல், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன், புகாராக எழுதித்தரும்படி கூறியுள்ளார். போதையில் இருந்த ராஜன், கோபத்துடன் திரும்பியுள்ளார்.
பின், இரவு 9:15 மணியளவில், ஆட்டோவில் மீண்டும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது தான் எடுத்து வந்த 5 லி., பெட்ரோலை உடலில் ஊற்றி, சிகரெட் லைட்டரால் தனக்குத்தானே தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த ராஜனை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதன்பின் ராஜன் புகார் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், கொருக்குப்பேட்டை, சி.பி.சாலை, ரயில்வே காலனியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருண்குமார், 26, என்பவரை கைது செய்தனர்.
தலைமறைவான கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார்.
அவநம்பிக்கை
மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி இருப்பதே, இதுபோன்ற துயர சம்பங்கள் அரங்கேற காரணமாக அமைந்துள்ளது. ஒரு சில காவலர்களால், ஒட்டுமொத்த காவல்துறை மீதும், மக்கள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்.