
ஏர்போர்ட் வேண்டாம் என தீர்மானம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஏகனாபுரம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். பரந்துாரில் விமான நிலையம் வேண்டாம் என, 15வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விமான நிலையத்தால் பறிபோகும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், 15வது ஊதிய ஒப்பந்த நிலுவையை வழங்க வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க போக்கு வரத்து ஊழியர்கள், 54 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
சோமங்கலத்தில் உறியடி திருவிழா
சோமங்கலம்: குன்றத்துார் அருகே சோமங்கலம் கிராமத்தில், நுாறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கண்ணபிரான் பஜனை கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் நான்காவது வாரத்தை முன்னிட்டு, அங்கு உறியடி திருவிழா நேற்று நடந்தது.
கண்ணபிரன் பெருமாள் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகள் செய்து, உறியடி துவங்கியது. பலர் பங்கேற்று உறியடித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.