/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்ட கல்லுாரியாக செயல்பட்ட பாரம்பரிய கட்டடம் குற்றவியல் நீதிமன்றமாக மாறுகிறது
/
சட்ட கல்லுாரியாக செயல்பட்ட பாரம்பரிய கட்டடம் குற்றவியல் நீதிமன்றமாக மாறுகிறது
சட்ட கல்லுாரியாக செயல்பட்ட பாரம்பரிய கட்டடம் குற்றவியல் நீதிமன்றமாக மாறுகிறது
சட்ட கல்லுாரியாக செயல்பட்ட பாரம்பரிய கட்டடம் குற்றவியல் நீதிமன்றமாக மாறுகிறது
ADDED : அக் 24, 2025 02:02 AM

சென்னை: சென்னை பாரிமுனையில் ஆங்கிலேயர்களால், 1891ல் துவங்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி. நாட்டின் இரண்டாவது தொன்மையான கல்லுாரி என்ற பெருமைக்குரியது. கடந்த 2018ம் ஆண்டு வரை, உயர் நீதிமன்ற வளாகத்தில் இக்கல்லுாரி இயங்கி வந்தது.
ஆரம்பத்தில், மெட்ராஸ் சட்டக்கல்லுாரி என்ற பெயரில் செயல்பட்ட இக்கல்லுாரி, 1990ல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியாக பெயர் மாற்றம் கண்டது.
ஹிந்து - இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஆங்கிலேய பொறியாளர் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடத்துக்கு, தற்போதைய வயது 134.
வன்முறை பதஞ்சலி சாஸ்திரி, ப.சதாசிவம் போன்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 1,000க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்களையும், இந்த கட்டடத்தில் செயல்பட்ட சட்டக்கல்லுாரி உருவாக்கியுள்ளது.
கடந்த 2008 நவ., 12ல், இந்த கல்லுாரி வளாகத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, இக்கல்லுாரியின் 3, 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு இரண்டாக பிரிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதுாரிலும் இரு கல்லுாரிகள் கட்டப்பட்டு, 2018 முதல் செயல்பட்டு வருகின்றன.
கடந்த, 2018க்கு பின், பாரம்பரிய கட்டடம் பயன்பாடின்றி முடங்கியது. மெட்ரோ ரயில் பணிகளால், இந்த கட்டடம் பழுதடைந்தும், ஓரிரு இடங்களில் விரிசல் விழுந்தும் காணப்பட்டது.
புனரமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டபின், சென்னை ஐ.ஐ.டி.,யின் நிபுணர் குழு உதவியுடன், மெட்ரோ ரயில் நிர்வாகம், பாரம்பரிய கட்டடத்தின் சேதத்தை சரிசெய்தது.
தமிழக அரசு ஒதுக்கிய, 23 கோடி ரூபாயில், பழமை மாறாமல் கட்டடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
பாரம்பரிய கட்டடத்தின் தரை மற்றும் முதல் தளத்தில், உயர் நீதிமன்றத்தின் ஆறு குற்றவியல் நீதிமன்றங்கள், வரும் 26ம் தேதி திறக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யா காந்த், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக, உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

