/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரம்மாண்ட வர்த்தக மையம் நந்தம்பாக்கத்தில் தயார்
/
பிரம்மாண்ட வர்த்தக மையம் நந்தம்பாக்கத்தில் தயார்
ADDED : டிச 04, 2024 12:27 AM

சென்னை, சென்னை நந்தம்பாக்கத்தில், 20,000 சதுர மீட்டரில், 4,000 பேர் அமரும் வகையில், தமிழக அரசு பிரம்மாண்ட வர்த்தக மையத்தை அமைத்துள்ளது. அங்கு, நிகழ்ச்சிகளை நடத்த, அரசு மற்றும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, தமிழக வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் என்ற சிறப்பு முகமையை துவக்கின. இதன் வாயிலாக சென்னை நந்தம்பாக்கத்தில், 2001ல் வர்த்தக மையம் அமைக்கப்பட்டது.
அங்கு, 10,560 சதுர மீட்டரில் கண்காட்சி அரங்கமும், 2,000 பேர் அமரும் வகையில் மாநாட்டு கூடமும் உள்ளது.
இதை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்வேறு தொழில் துறையினர் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில், கண்காட்சிக்கும், மாநாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்காக, 380 கோடி ரூபாய் செலவில் சென்னை வர்த்தக மையம், 20,000 சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதில், கண்காட்சி அரங்கம், மாநாட்டு கூடம், 16,000 சதுர அடியில் இடம்பெற்றுள்ளன.
விரிவாக்க மையத்தின் தரைதளத்தில், 10,000 சதுர மீட்டருக்கு கண்காட்சி அரங்கம் உள்ளது. முதல் தளத்தில், 2,500 சதுர அடியில் கண்காட்சி அரங்கம், 4,000 பேர் அமரும் வகையில் மாநாட்டு கூடம் இடம்பெற்று உள்ளன.
தலா, 350 பேர் அமரும் வகையில் மூன்று அரங்குகள், 14 கூட்ட அறைகள், தலா, 20 பேர் அமரும் வகையில், நான்கு அறைகளும் உள்ளன. மொத்தம், 1,300 கார்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு ஜனவரியில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, புதிய வர்த்தக மையத்தில் நடத்தப்பட்டது. அந்த மையத்தின் கட்டுமான பணிகள் முழுதுமாக முடிந்துள்ளன.
கண்காட்சி அரங்கிற்கு ஒரு சதுர அடிக்கு, 175 ரூபாயும்; மாநாட்டு கூடத்தில் ஒரு நாற்காலிக்கு, 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே இருந்த வர்த்தக மையத்தில் முதல் தளம் கிடையாது. தரை தளத்தில் மட்டுமே கண்காட்சி அரங்கம், மாநாட்டு கூடம் இடம்பெற்றிருந்தன. சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள வர்த்தக மையத்தில், தரை தளத்திலும், முதல் தளத்திலும் கண்காட்சி அரங்குகள் உள்ளன.
முழுதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு அறையில் பேசும் போது, 'எக்கோ' ஏற்படாமல் இருக்கும் வகையில், சுவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 16 லிப்ட்கள், 'பவர் பேக் அப்' என, பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனிநபர், கட்சியினர், அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.