/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி கத்திப்பாராவில் புது தொழில்நுட்பத்துடன் 101 அடி உயரத்தில் பிரமாண்ட மெட்ரோ ரயில் பணி
/
கிண்டி கத்திப்பாராவில் புது தொழில்நுட்பத்துடன் 101 அடி உயரத்தில் பிரமாண்ட மெட்ரோ ரயில் பணி
கிண்டி கத்திப்பாராவில் புது தொழில்நுட்பத்துடன் 101 அடி உயரத்தில் பிரமாண்ட மெட்ரோ ரயில் பணி
கிண்டி கத்திப்பாராவில் புது தொழில்நுட்பத்துடன் 101 அடி உயரத்தில் பிரமாண்ட மெட்ரோ ரயில் பணி
ADDED : ஜூலை 11, 2025 12:29 AM

சென்னை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கிண்டி கத்திப்பாராவில், 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்பால ரயில் பாதை கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன.
சென்னையில் இரண்டாவது கட்டமாக நடக்க உள்ள மூன்று மெட்ரோ வழித்தடங்களில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடம், மொத்தம் 47 கி.மீ., துாரத்திற்கு 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன.
சவாலான பணி
இந்த வழித்தடத்தில் மேம்பால பாதைக்காக 300க்கும் மேற்பட்ட துாண்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. துாண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள இடங்களில், மேம்பாலம் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த தடத்தில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து 1,354 அடி துாரத்திற்கு மேம்பால பாதையில் பிரமாண்டமாக ரயில் பாதை அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடக்கின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்துார் நகராட்சி அலுவலகம் வரையில் 1,354 அடி துாரத்திற்கு, 410 அடி ஆரத்துடன் கூடிய வளைவு பாதை அமைகிறது.
'கேண்டிலீவர்' முறை
வழக்கமாக மெட்ரோ ரயில் மேம்பால பாதையில், 'கர்டர்' எனப்படும், ராட்சத கான்கிரீட் பாலம் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், கத்திப்பாராவில் சாலைகள், பாலம், சுரங்கப்பாதை இருப்பதால், அதுபோல் பணிகள் மேற்கொள்ள முடியாது.
எனவே, நகர்ப்புறங்களில் சிக்கலான இடங்களில் பயன்படுத்தப்படும் 'பேலன்ஸ்டு கேண்டிலீவர் முறை' என்ற தொழில்நுட்பத்தால் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கத்திப்பாரா மேம்பாலம், முதற்கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கும் மேல் இந்த பாதை அமைகிறது. பூமியில் இருந்து 101 அடி உயரத்தில் இந்த மேம்பால பாதை அமைகிறது.
இந்த பகுதிகளில் எந்த சாலையும் மூடவில்லை. ஏற்கனவே சற்று துாரம் இடைவெளியில் அமைக்கப்பட்ட ஆறு பிரமாண்டமான துாண்களையும் ஒன்று சேர்க்கும் வகையில், கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
ஒரே நேரத்தில் 110 டன்வரை எடையுள்ள கட்டுமான பொருட்களை கொண்டு சென்று, பணிகள் மேற்கொள்ளும் அளவுக்கு, 'பார்ம் டிராவலர்' என்ற கட்டுமான கருவிகளை பயன்படுத்தி வருகிறோம்.
௨ ஆண்டுகளில்...
உயரமாகவும், வளைவுடனும் அமையவுள்ளதால், இது சவாலான பணியாக உள்ளது. மிகவும் கவனத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பணிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடித்து, மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளோம்.
அப்போது, இந்த வழித்தடத்தில் பயணியர் மெட்ரோ ரயில் சேவை துவங்கும்போது, கத்திப்பாராவில் மற்றொரு பிரமாண்டமான பயணத்தை பயணியர் உணர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.