/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் பாதி புதைந்த மாநகராட்சி குப்பை லாரி
/
சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் பாதி புதைந்த மாநகராட்சி குப்பை லாரி
சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் பாதி புதைந்த மாநகராட்சி குப்பை லாரி
சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் பாதி புதைந்த மாநகராட்சி குப்பை லாரி
ADDED : நவ 13, 2024 02:40 AM

சின்ன போரூர்:சின்ன போரூர் மருத்துவமனை சாலையில், மூன்றாவது முறையாக ஏற்பட்ட பள்ளத்தில், மாநகராட்சி குப்பை லாரி சிக்கி பாதி புதைந்ததால், சலசலப்பு ஏற்பட்டது.
வளசரவாக்கம் மண்டலம் 151வது வார்டில், சின்ன போரூர் மருத்துவமனை சாலை உள்ளது. இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிந்து, கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
மருத்துவமனை சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரேஷன் கடை, மாநகராட்சி மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக, இந்த சாலை உள்ளது. இந்த சாலையின் கீழ் 25 அடி ஆழத்தில், பாதாள சாக்கடை குழாய் செல்கிறது.
கடந்த ஆண்டு பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்த போது, குடிநீர் குழாய் உடைந்து மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.
ஓராண்டாக நடந்த பணிகளுக்குப் பின், பள்ளம் சீர் செய்யப்பட்டது. இந்நிலையில், அதே இடத்தில் கடந்த அக்., மாதம் 23ம் தேதி இரவு, மீண்டும் மண் சரிந்து 5 அடி ஆழத்திற்கு 10 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
குடிநீர் வாரியம் சார்பில் இரு நாட்களுக்கு முன் அப்பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்யப்பட்டது. இதனால், தார் சாலை அமைக்க மாநகராட்சி தயாரானது. மழையால் சாலை அமைக்கும் பணி தடைபட்டது.
நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையில், மண் ஊறிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்ற மாநகராட்சி குப்பை அள்ளும் லாரியின் சக்கரம், திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது.
இதில், லாரி பாதி அளவு புதைந்தது. பள்ளத்தில் சிக்கிய குப்பை லாரியை,'கிரேன்' மற்றும் 'பொக்லைன்' உதவியுடன் அப்புறப்படுத்தினர். அதற்கு முன், அவ்வழியாக சென்ற இருச்கர வாகனங்களின் சக்கரங்களும் மண்ணில் புதையும் நிலை ஏற்பட்டது.
எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.