விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு புது முயற்சி!
விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு புது முயற்சி!
UPDATED : ஆக 29, 2026 09:00 PM
ADDED : ஆக 29, 2026 08:43 PM
- நமது நிருபர் -
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட இருந்த சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தை, தமிழக அரசு கைவிட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொழில் துறை, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். விமான நிலை விரிவாக்கத்திற்கு, பரங்கிமலையில் உள்ள ஓ.டி.ஏ., எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி இடத்தை பெறவும், பயிற்சி அகாடமியை நவீன கட்டமைப்பு வசதிகளுடன் பரந்துாருக்கு மாற்றவும், அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஓடுபாதை இயக்க சிக்கல்கள், மேம்பாட்டு பணிக்கான நிலம் கையகப்படுத்த முடியாத நிலை மற்றும் வளர்ச்சிப் பணிகள் இழுத்தடிப்பாலும் திணறி வருகிறது. எதிர்கால தேவை கருதி, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சென்னை மற்றும் புறநகரில் நான்கு இடங்களை அடையாளம் காணப்பட்டு, காஞ்சிபுரத்தின் பரந்துார் இறுதி செய்யப்பட்டது. இதற்காக தனியார் வசம் உள்ள, 3,774 ஏக்கர் கையகப்படுத்தும் பணிகள், 2024ல் தொடங்கின.
இத்திட்டத்திற்கு நிலம் வழங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை, த.வெ.க., தலைவரான விஜய் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
இதனால், பரந்துார் விமான நிலைய திட்டம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், அத்திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய், கடந்த வாரம் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, அதன் மேற்கு பகுதியில், ஐந்தாவது பயணியர் முனையம் மற்றும் அதற்கான அணுகுசாலை, மேம்பாலம் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விமான நிலையங்களின் ஆணையம் இரு முறை, விரிவான திட்ட அறிக்கையை, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கியது. ஆனால், அத்திட்டத்தை தி.மு.க., அரசு நிராகரித்தது.
ஆலோசனை இந்நிலையில், சென்னை விமான நிலையத்தை மீண்டும் மேம்படுத்தும் பணிகளை விரைவாக தொடங்குவது தொடர்பாக, தலைமை செயலகத்தில், தொழில் துறை அதிகாரிகள், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம், மேற்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதை, தாம்பரம் - மதுரவாயல் சாலையுடன் இணைக்கும் வகையில் அணுகு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் ஆய்வுக்கான அனுமதிகளை நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்டட துறைகள் விரைவாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஜி.எஸ்.டி., சாலை மட்டுமின்றி, தாம்பரம் - மதுரவாயல் சாலையில் இருந்து விமான நிலையத்திற்கு பயணியர் வரலாம்.
இந்த சாலையை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வருவோர் பயன்படுத்தி நேரடியாக விமான நிலையம் வர முடியும்.
அரசு ஆர்வம் சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலையில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, 650 முதல் 750 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த இடத்தை தமிழக அரசு, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து கேட்டு பெற்று, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம்.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்காக இதுவரை, 1,800 ஏக்கர் கையக்கப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு, 1,000 ஏக்கரில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியை, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், தமிழக அரசு அமைத்து தரும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
இதனால், சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையை முழுவதுமாக பயன்படுத்தும் சூழல் ஏற்படும். விமானங்களின் இயக்கமும் மூன்று மடங்கு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***
