/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேங்கைவாசல் ஏரிக்கு மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுகோள்
/
வேங்கைவாசல் ஏரிக்கு மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுகோள்
வேங்கைவாசல் ஏரிக்கு மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுகோள்
வேங்கைவாசல் ஏரிக்கு மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டுகோள்
ADDED : அக் 26, 2024 03:19 AM

சேலையூர்:தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியில், 110 ஏக்கர் பரப்பளவு உடைய, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.
சுற்றியுள்ள மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து, நிலத்தடி நீர் கெட்டுவிட்டது.
மற்றொரு புறம், மழைக்காலத்தில், கவுரிவாக்கம், செம்பாக்கம் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த ஏரிக்கு செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை.
இதனால், ஏரியை ஒட்டியுள்ள காலி மனைகளிலும், சாலையிலும் தேங்கி வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்தும், ஏரிக்குள் மழைநீர் செல்வதற்கான கால்வாய் வசதியை ஏற்படுத்த, பொதுப்பணித் துறையின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மழைநீர் பெரிய ஏரிக்கு சென்றால், ஏரி நிரம்பி கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், சித்தேரிக்கு செல்லும். இதனால், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்குவது தடுக்கப்படும்.
அதேபோல், இந்த ஏரியில், 2019ம் ஆண்டு பொது கிணறு ஒன்று தோண்டப்பட்டு, கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது.
அந்த கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, தொட்டியில் நிரப்பி, பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அந்த கிணற்றில் இருந்து தண்ணீரை எடுப்பதை திடீரென நிறுத்திவிட்டனர். குடிக்க உகந்ததாக தண்ணீர் இல்லை என காரணம் தெரிவித்தனர்.
தவிர, இந்த ஏரியில் பொதுமக்கள் நடைபயிற்சிக்காக போடப்பட்ட நடைபாதை பராமரிப்பின்றி புதர்மண்டிவிட்டது.
'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறிவிட்டது. திரும்பிய இடமெல்லாம் மது பாட்டில்களாகவே உள்ளன. நீர்வள துறையினரின் அலட்சியத்தால், வேங்கைவாசல் ஏரி நாசமாகிவிட்டது.
மழைநீர் ஏரிக்கு செல்ல கால்வாய் அமைக்கவும், தோண்டப்பட்ட கிணற்று நீரை பயன்படுத்தவும், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.