ADDED : மார் 19, 2024 12:30 AM

திரு.வி.க.நகர்,
திரு.வி.க.நகர் மண்டலம் 77வது வார்டில் உள்ள முனுசாமி தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் நிரம்பி வழிந்து சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி சாலையா அல்லது கழிவுநீர் ஓடையா என்ற சந்தேகம் வருகிறது.
இது குறித்து பகுதிமக்கள் கூறுகையில், 'கழிவுநீர் பாதாள சாக்கடை மூடி வழியே வெளியேறி சாலையில் தேங்குகிறது. பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், நிம்மதியாக சாப்பிட முடிவதில்லை; ஏன் சுவாசிக்க கூட முடிவதில்லை. மேலும் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது,'' என்றனர்.
அதேபோல, 73வது வார்டு நாராயணசாமி தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் அச்சாலை முழுக்க தேங்கி தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியிலும் சாலையில் கழிவுநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பகுதி மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து பகுதி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் பிரச்னைக்கான காரணத்தை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் மற்ற பகுதியிலும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
