/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடீர் தீயால் சென்னை விமான நிலையத்தில்... புகை மண்டலம்!:கண் எரிச்சல், மூச்சு திணறலால் பயணியர் அவதி
/
திடீர் தீயால் சென்னை விமான நிலையத்தில்... புகை மண்டலம்!:கண் எரிச்சல், மூச்சு திணறலால் பயணியர் அவதி
திடீர் தீயால் சென்னை விமான நிலையத்தில்... புகை மண்டலம்!:கண் எரிச்சல், மூச்சு திணறலால் பயணியர் அவதி
திடீர் தீயால் சென்னை விமான நிலையத்தில்... புகை மண்டலம்!:கண் எரிச்சல், மூச்சு திணறலால் பயணியர் அவதி
ADDED : ஜன 28, 2026 05:05 AM

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை சூழ்ந்ததால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பயணியர், அலுவலர்கள் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும், 70,000 பேர் வரை வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், இரண்டாம் தள புறப்பாடு பகுதியில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அங்கு, நேற்று மதியம் 12:00 மணியளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ அப்பகுதி முழுதும் பரவியது. இதனால், இரண்டாவது தளம் முழுதும் புகைமூட்டம் சூழ்ந்தது. மற்ற பகுதிகளிலும் புகை பரவியது.
கண் எரிச்சல்
விபத்து நடந்த இடத்திற்கு விமான நிலைய அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் வந்தனர்.
அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ விபத்து நடந்த இரண்டாவது தளம் மற்றும் இதர இடங்களிலும் புகைமூட்டம் சூழ்ந்து, பயணியர், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகினர். பலர் கண் எரிச்சலாலும் பாதிக்கப்பட்டனர்.
இதனால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் இருந்து, மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நான்கு தீயணைப்பு வாகனங்கள் வாயிலாக, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. புகையும் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக பயணியர், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் ஊழியர்கள் என, அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், மூச்சுத்திணறல் காரணமாக பயணி ஒருவர் மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விமான நிலைய ஊழியர்கள் இருவர் மயக்கமடைந்து, உரிய சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருப்பதும் தெரிய வந்தது.
விமானங்கள் ரத்து
தீ விபத்து காரணமாக, ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான ஓடு பாதைகள் மூடப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால், விமான சோவையில் பாதிப்பு ஏதும் இல்லை என, விமான நிலைய அதிகாரிகள் மறுத்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிறுவனத்தின் அலுவலகத்தில், ஆவணங்கள் வைத்து இருக்கும், 'ஸ்டோர் ரூமில்' திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது.
இது, சிறிய விபத்து தான். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விமான சேவையிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வழக்கம் போல விமான சேவை தொடர்கிறது. பயணியர் அச்சம் அடையை தேவையில்லை. விபத்து குறித்து முறையான விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை விமான நிலையத்திற்குள் ஏழு அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி, நேற்று முன்தினம் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜோஸ்வா, 25, என்பவர் புகுந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நடந்ததா அல்லது நாசவேலை காரணமா என்பது குறித்து, விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

