'நைட்ரஜன் சிலிண்டர்' வெடித்து 'ஏசி' மெக்கானிக் கைகள் துண்டிப்பு
'நைட்ரஜன் சிலிண்டர்' வெடித்து 'ஏசி' மெக்கானிக் கைகள் துண்டிப்பு
ADDED : மே 22, 2026 03:56 AM
சென்னை: 'ஏசி' பழுது பார்க்கும் கடையில், நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில், வாலிபரின் இரு கைகளும் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடம்பாக்கம், தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், 26. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் 'ஏசி' சர்வீஸ் கடையில், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் கடையில் இருந்த பெரிய நைட்ரஜன் சிலிண்டரில் இருந்து சிறிய சிலிண்டருக்கு வாயுவை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், திலீப்குமாரின் இரு கைகளும் மணிக்கட்டு வரை துண்டாகி, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரித்த கோடம்பாக்கம் போலீசார் கடை உரிமையாளரான ராம்குமார், 32, மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திலீப்குமாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த கோர விபத்து அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
