/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய அரைகுறை பணியால் விபத்து அபாயம்
/
குடிநீர் வாரிய அரைகுறை பணியால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 02:34 AM

அண்ணா நகர்:குடிநீர் வாரிய அறைகுறை பணியால், திறந்த வெளியில் கிடக்கும் பள்ளத்தில், அவ்வழியாக செல்வோர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில், கிழக்கு அண்ணா நகர், வ.உ.சி., நகரில், நேரு தெரு உள்ளது. இத்தெருவில் சில நாட்களுக்கு முன், மாநகராட்சியால் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
அப்போது, அப்பகுதியில் குடிநீர் வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் குழாய் சேதமடைந்தது. அதற்காக பள்ளம் தோண்டி, குழாயை சீரமைக்கும் பணிகளை வாரியம் மேற்கொண்டது.
தற்போது, அப்பணிகள் பல நாட்களாக அரைகுறையாக விடப்பட்டதால் தோண்டிய பள்ளத்தில் கம்பிகள் நீட்டிக் கொண்டு, உயிர்பலிக்காக காத்திருக்கிறது. இதனால், அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'பல நாட்களாகவே பள்ளம் அப்படியே இருப்பதால், பணி நடப்பது போல் தெரியவில்லை.
'திறந்தவெளி பள்ளத்தின் அருகில், தடுப்புகள் இல்லாததால், விபத்து அபாயத்தில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். நேற்று முன்தினம் அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார்' என்றனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட இடத்தில் பணிகள் நடக்கின்றன. இன்று அல்லது நாளை மாலைக்குள் பணிகள் நிறைவு செய்து, பள்ளம் சீரமைக்கப்படும்' என்றனர்.