ADDED : ஆக 28, 2026 08:12 PM
சென்னை: செங்கல்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில், 15 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அரும்பாக்கத்தில் உள்ள அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்திய மருத்துவ நலவாழ்வு சிகிச்சை மையத்தை, அமைச்சர் அருண்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.
இந்த மையத்தில் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். வர்மம், அக்குபஞ்சர், யோகா உள்ளிட்ட 16 வகையான ஒருங்கிணைந்த சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
இம்மையத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த கட்டணத்திலும், கட்டணமில்லா பிரிவிலும் சிகிச்சை வழங்கப்படும். செங்கல்பட்டில் 28 படுக்கைகள் உடைய மருத்துவமனையில், 10 முதல் 15 நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும்.
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து மருத்துவ சுற்றுலா ஊக்குவிக்கப்படும். சித்த மருத்துவமனைகளில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல், சித்தா பல்கலை விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
