/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியின்றி சாலையை தோண்டினால் நடவடிக்கை
/
அனுமதியின்றி சாலையை தோண்டினால் நடவடிக்கை
ADDED : ஆக 12, 2025 12:22 AM
சென்னை, 'அனுமதியின்றி சாலைகளை தோண்டி வேலை செய்வது அரசு அதிகாரிகளாக இருந்தாலும், வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை, மின் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் துறை மற்றும் பிற சேவை துறைகள், பல்வேறு திட்ட பணிகளுக்காக, அவ்வப்போது தோண்டுகின்றனர்.
இதற்கு மாநகராட்சியின் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற சாலைகளை மாநகராட்சி கண்காணித்து, சீரமைக்க வழிவகை செய்யும்.
ஆனால், மாநகராட்சி அனுமதி பெறாமல் சாலைகளை பல துறைகளும் இஷ்டம்போல் தோண்டிவிட்டு, அப்படியே விட்டு விடுகின்றனர். இது, சாலை விபத்துகளுக்கும், உயிரிழிப்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது.
எனவே, அனுமதியின்றி சாலைகளை தோண்டும் தனி நபர்கள், தனியார் துறையினர், அரசு துறையினர் யாராக இருந்தாலும், போலீசில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அனுமதியின்றி, குடிநீர் வாரியம் சார்பில் சாலை தோண்டும் பணி நடந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவான நிலையில், உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியதால் நடவடிக்கை கைவிடப்பட்து.
இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ''மாநகராட்சி சாலைகளில், மாநகராட்சி அனுமதியுடன் தான் சாலைகளை தோண்டி பணிகளில் ஈடுபட வேண்டும். அனுமதியின்றி சாலைகளை தோண்டி பணிகளை செய்தால், அரசு துறை அதிகாரிகளாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும், போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.