/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் மேம்பாலத்தை இருவழியாக மாற்ற நடவடிக்கை
/
பல்லாவரம் மேம்பாலத்தை இருவழியாக மாற்ற நடவடிக்கை
ADDED : ஜன 18, 2024 12:51 AM
பல்லாவரம்,பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., - குன்றத்துார் சாலைகள் சந்திப்பை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினம் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அந்த சந்திப்பில், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் இரு பாதைகள் உடைய, ஒரு வழி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் இருந்து, சென்னை நகர்களுக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி, பாதுகாப்பு துறை குடியிருப்பு அருகே இறங்குகின்றன.
கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்கின்றன. அப்படி இருந்தும், நெரிசல் குறையவில்லை.
இதற்கு தீர்வாக, கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி, இறங்க வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இது குறித்து, நம் நாளிதழில், சில நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேம்பாலத்தின் நடுவில் பிளாஸ்டிக் தடுப்பு பொருத்தப்பட்டு, இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரும்பு தடுப்பு, வர்ணம் தீட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகள் முடிந்து, ஓரிரு நாட்களில் மேம்பாலத்தில் இருவழிப்பாதையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிகிறது. கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும், மேம்பாலத்தில் ஏறி இறங்க அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.