/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடுகாட்டில் வசித்தாலும் பட்டா மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு
/
இடுகாட்டில் வசித்தாலும் பட்டா மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு
இடுகாட்டில் வசித்தாலும் பட்டா மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு
இடுகாட்டில் வசித்தாலும் பட்டா மாநகராட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு
ADDED : அக் 31, 2025 12:16 AM

சென்னை:  'அரசு புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும். களம், மயானம், இடுகாட்டு நிலங்களில் வசிப்பவர்களுக்கும், வீட்டுமனை பட்டா வழங்க தடையின்மை சான்று வழங்கப்படும்' என, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 105வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அதியமான் பேசுகையில், ''எம்.எம்.டி.ஏ., குடியிருப்பில் உள்ளோர் இருசக்கர வாகனங்களை தெருவில் நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது. வாகனம் நிறுத்த வசதி இருப்பதாக கூறி உரிமம் வாங்குபவர்கள், வீடு கட்டும்போது அதற்கான இடம் விடுவது இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
மேயர் பிரியா, ''3,500 சதுர அடியில் வீடுகள் கட்டினால், பார்க்கிங் வசதியுடன் உரிமம் வழங்கப்படும். இதற்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில், பொதுவான ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்த, மாநகராட்சி சார்பில் இடவசதி செய்து தரப்படும்,'' என்றார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 145வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன் பேசுகையில், ''சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பாதிப்பை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, 104வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செம்மொழி பேசுகையில், ''மெரினா கடற்கரையில், 'ரோப்' திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்,'' என, கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறுகையில், ''ரோப் கார் சேவைக்கான திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது. விரைவில் செயல்படுத்தப்படும்,'' என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
 அரசு புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்
 வருவாய்த்துறை ஆவணங்களில், பாதை, வண்டிப்பாதை, பாட்டை, களம், மயானம், இடுகாடு, கார்பரேஷன் பப்ளிக் ஆகிய வகைப்பாடு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க தடையின்மை சான்றிதழ் வழங்கப்படும்
 துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க மூன்றாண்டுகளுக்கு, 'புட் ஸ்விங் என்டர்பிரைசஸ்' நிறுவனத்திற்கு, 180.27 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது
 துாய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக, 761 ரூபாய்; ஓட்டுநர்களுக்கு 799 ரூபாயாக சம்பளம் உயர்த்தபட்டுள்ளது
 மயிலாப்பூர் மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள கிழக்கு வட்ட சாலைக்கு, பாடகர் 'சீர்காழி கோவிந்தராஜன் சாலை' என, பெயர் மாற்றப்படுகிறது
 சென்னையில், நவ., 24க்குள் செல்லப்பிராணிகளுக்கு பதிவு உரிமம் பெறாமல் இருந்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பாதுகாப்பு கவசமின்றி வெளியே அழைத்து வந்தால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது உட்பட, 72 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., வெளிநடப்பு
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 182வது வார்டு, கவுன்சிலர் சதீஷ்குமார் பேசுகையில், ''காமராஜர் நகரில் மூன்று ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணி நடக்கவில்லை,'' என்றார்.
இதற்கு, ''182வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ளோரின், வீட்டுமனை பட்டா, வீட்டு வரி, மின்சார இணைப்பு உள்ளிட்டவை, 184வது வார்டில் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வார்டு பிரச்னையால் பணிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும்,'' என, மேயர் பிரியா பதில் அளித்தார்.
தொடர்ந்து கவுன்சிலர் சதீஷ்குமார் பேசுகையில், ''நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது,'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., கவுன்சிலர்கள், 'கருணாநிதியால் துவங்கப்பட்டது' என, கோஷம் எழுப்பினர்.
இருதரப்பும் மாறிமாறி, கருணாநிதி, ஜெயலலிதா என, கூச்சலிட்டனர். இதனால், சதீஷ்குமாருக்கான 'மைக் இணைப்பு' துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

