/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் முடக்கம்; குற்றங்களுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
/
நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் முடக்கம்; குற்றங்களுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் முடக்கம்; குற்றங்களுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் முடக்கம்; குற்றங்களுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
UPDATED : மே 09, 2025 06:58 AM
ADDED : மே 09, 2025 01:32 AM

அம்பத்துார், சென்னை - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, 35 கி.மீ.,க்கும் மேல் நீளம் உடையது. இதில், பாடி மேம்பாலத்தில் இருந்து, அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் வரையிலான, 7 கி.மீ., நீள சாலையில் 120க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 50 சதவீத கேமராக்கள் பழுதடைந்து, செயலற்று காணப்படுகின்றன.
குறிப்பாக, கொரட்டூர், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் போன்ற முக்கிய சந்திப்புகளிலும், பாடி, மண்ணுார்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேமரா செயல்பாடு முடங்கியுள்ளது.
அதேபோல், அம்பத்துார் - செங்குன்றம் நெடுஞ்சாலையில், அம்பத்துார் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட 4 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கேமராக்களில், பெரும்பாலானவை தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கின்றன.
குற்றச்செயல்களை கண்காணிக்கவும், குற்றங்களை குறைப்பதற்காகவும் வைக்கப்பட்ட கேமராக்கள் செயல்படாமல் முடங்கியுள்ளதால், இச்சாலைகளில், சமூக விரோத கும்பல், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த பிப்., மாதம் 14ம் தேதி, அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில், காசாளரை கத்தியால் வெட்டி, போதை கும்பல் தப்பியது. கேமராக்கள் செயல்படாததால் அவர்களை கண்டுபிடிப்பதில், போலீசார் பெரிதும் சிரமப்பட்டனர்.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய கும்பலை நசரத்பேட்டை போலீசார் பிடித்தபோது, அந்த கும்பல், அம்பத்துார் உணவகத்தில் காசாளரை வெட்டியதும் தெரிந்தது.
இது ஒருபுறமிருக்க, தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்கள் நடக்கும்போது, அதற்கான காரணத்தை கண்டறிய, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் திணறுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களையே அவர் ஆதாரமாக சேகரிக்கின்றனர். இதிலும் ஏராளமான சிக்கல் உள்ளது.
எனவே, ஆவடி காவல் ஆணையரக போலீசார், செயல்படாமல் உள்ள கேமராக்களை சீர்செய்யவும், புதிய கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பல்வேறு திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவன நிதியுதவியில், தேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இவற்றை, ஆவடி காவல் ஆணையரக போலீசார் முறையாக பராமரிக்காததால், பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது. நிதியை திரட்டி கேமராக்களை பொருத்துவதில் காட்டும் ஆர்வத்தை, அதை பராமரிப்பதிலும் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆவடி காவல் ஆணையரகம், போக்குவரத்து துறை அதிகாரி கூறியதாவது:
அம்பத்துார் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில், சென்னை - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில், 11 கேமராக்களும், அம்பத்துார் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆறு கேமராக்களும், முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன.
இவை பயன்பாட்டில் உள்ளன. தனியார் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., நிதியில் பொருத்தப்படும் கேமராக்கள், அவர்களே பராமரித்து, கண்காணித்து வருகின்றனர். இது தவிர 'நிர்பயா' திட்ட நிதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், அம்பத்துார் டன்லப் அருகில் உள்ள ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.