/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதம்பாக்கம் மேம்பால பணிகள் ஐ.ஐ.டி., அறிக்கைக்கு காத்திருப்பு
/
ஆதம்பாக்கம் மேம்பால பணிகள் ஐ.ஐ.டி., அறிக்கைக்கு காத்திருப்பு
ஆதம்பாக்கம் மேம்பால பணிகள் ஐ.ஐ.டி., அறிக்கைக்கு காத்திருப்பு
ஆதம்பாக்கம் மேம்பால பணிகள் ஐ.ஐ.டி., அறிக்கைக்கு காத்திருப்பு
ADDED : பிப் 17, 2024 12:30 AM

சென்னை, வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக, பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., நீளத்திற்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமான பணிகள், 4.5 கி.மீ., துாரத்திற்கு முடிவடைந்தன.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை, 500 மீட்டர் துாரம் இணைக்கும் கட்டுமான பணிகள், நிலப் பிரச்னைக்குப் பின், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றது.
அடுத்த சில மாதங்களில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில்வே சேவையை துவக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக, தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், துாண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது.
இந்நிலையில், 157 மற்றும் 158வது துாண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு, ஒரு பக்க இரும்பு சாரம் அகற்றப்பட்டது. அந்த மேம்பாலத்தின் பாரம் தாங்காமல், ஒரு பகுதி கடந்த மாதம் கீழே விழுந்து, 3 அடி ஆழத்திற்கு சாலையில் புதைந்தது.
ஆதம்பாக்கத்தில் இருந்து மவுன்ட் வரை அமைக்கப்படும் துாண்கள், 20 முதல் 30 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், 157- - 158வது துாண்களுக்கு இடையே, 45 முதல் 50 மீட்டர் துாரம் இடைவெளி உள்ளது. அதனால், பாரம் தாங்காமல் ஒரு பக்க துாணின் தாங்கும் பகுதி உடைந்ததால், பாலம் கீழே விழுந்தது தெரிந்துள்ளது.
மேம்பாலத்தை தாங்க, 'ஹைட்ராலிக் சஸ்பென்ஷன்' பொருத்தப்பட்டிருந்தும் பாலம் உடைந்துள்ளது. இதனால், துாண்களின் உறுதித்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
எனவே, பாலம் விழுந்ததற்கான உண்மையான காரணம் குறித்தும், மற்ற பாலங்கள், துாண்களின் உறுதித்தன்மை குறித்தும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ள, ஐ.ஐ.டி., நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் தொடர் ஆய்வு செய்துள்ள நிலையில், அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
அந்த அறிக்கைக்காக, ரயில்வே துறையினர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், உடைந்து தொங்கும் பாலத்தை அகற்ற, பெங்களூரில் இருந்து மூன்று ராட்சத, 'கிரேன்'களை வரவழைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- -நமது நிருபர் --