/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிமூலப்பெருமாள் கோவில் திருப்பணிக்கான பாலாலயம்
/
ஆதிமூலப்பெருமாள் கோவில் திருப்பணிக்கான பாலாலயம்
ADDED : ஜூலை 15, 2025 12:28 AM

சென்னை, ஆதிமூலப் பெருமாள் கோவில் திருப்பணிக்கான பாலாலயம் நேற்று நடந்தது.
வடபழனியில் உள்ள ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில் நுாற்றாண்டு பழமையானது. இக்கோவிலில் உற்சவராக கஜேந்திர வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
கோவிலில் வேணுகோபாலன், ஆண்டாள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. விக்னேஷ்வரர், நம்மாழ்வார், கலியன், மணவாள மாமுனிகள், உடையவர் காட்சி தருகின்றனர். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடபழனி முருகன் கோவிலின் உப கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலுக்கு, 1960ம் ஆண்டு கடைசியாக திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கோவிலுக்கு திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
அறநிலையத்துறை கமிஷனரின் பொதுநல நிதி, 1.84 கோடி ரூபாய்; வடபழனி முருகன் கோவில் நிதி, 1.53 கோடி ரூபாய் என, 3.37 கோடி ரூபாயில் திருப்பணிகள், மே மாத இறுதியில் இருந்து நடந்து வருகிறது.
ஆதிமூலப் பெருமாள் கோவில் திருப்பணியில் மூலவர், தாயார் சன்னதி முன்புற கல்மண்டபம் அமைத்தல், கோவிலின் மூன்று புறங்களிலும் நுழைவுவாயில்கள் அமைத்தல், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் உள்ளிட்டவை, ஆகம விதிகளின்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், கோவில் சன்னதிகளில் திருப்பணி மேற்கொள்ளும் வகையில், அனைத்து சன்னதி மூலவர் திருமேனிகளை அத்திமரத்தில் படமாக வரைந்து ஆவாகனம் செய்து, ஹோமம் வளர்த்து, மூன்று கால பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம் நடக்கும் வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மூலவர் திருமேனிகளையும், உற்சவ மூர்த்திகளையும் தரிசனம் செய்யலாம்.
***