/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு வைபவம் விமரிசை
/
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு வைபவம் விமரிசை
ADDED : டிச 15, 2024 12:08 AM

சென்னை,திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு நடைபெற்ற புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவிலில், ஆண்டு முழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், பவுர்ணமி தினத்தன்று மூலவரின் கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டிற்கான கவசம் திறப்பை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, நவ தீபங்கள் காண்பிக்கப்பட்டு, ஆதிபுரீஸ்வர் மீது அணிவிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட, நாக கவசம் திறக்கப்பட்டு மஹா அபிஷேகம் நடந்தது.
ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி காண, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று மதியம் முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கவச திறப்பிற்கு பின், 'ஒற்றீசா, தியாகேசா' என முழங்கியபடி சிவபெருமானை தரிசித்தனர்.
இன்றும், நாளையும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி காண முடியும். இந்நிகழ்வை கண்டுகளிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். அவர்களின் பாதுகாப்பிற்காக, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில், கோவில் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும், பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 300 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில், மருத்துவ முகாம், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மண்டல குழு தலைவர் தனியரசு தெரிவித்தார்.