/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக அதிகரிப்பு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., வரவேற்பு
/
கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக அதிகரிப்பு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., வரவேற்பு
கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக அதிகரிப்பு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., வரவேற்பு
கவுன்சிலர் நிதி ரூ.50 லட்சமாக அதிகரிப்பு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., வரவேற்பு
ADDED : பிப் 23, 2024 12:47 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில், பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் வரவேற்றுள்ளனர். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
தமிழில் தீர்மானம்
சென்னை மாநகராட்சியில், 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கான விவாதம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
அப்போது, தி.மு.க., அதன் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள், பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று பேசினர்.
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் : தனியார் பள்ளிகளுக்கு நிகரான, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும், 'ஷூ, சாக்ஸ்' வழங்குவது, வரவேற்க வேண்டியது. இவற்றை, பிளஸ் 2 வரை படிக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும். கர்ப்பிணியருக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம், பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதாக உள்ளது.
புதிய விளையாட்டுத் திடல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் பெரிய பூங்காக்களிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்க வேண்டும். மன்ற கூட்டத்தில் வைக்கப்படும் அனைத்து தீர்மானங்களும், தமிழில் மட்டுமே இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக்: பட்ஜெட் அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படித்து, முதலாம் வகுப்பு சேரும் மழலையர்களுக்கு, 'பட்டம்' வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் போன்ற, விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், மழலையர் படிப்புகள் இல்லை. அனைத்து பள்ளிகளிலும் ஆரம்பநிலை படிப்புகளை கொண்டு வர வேண்டும்.
மேலும், சுகாதாரத்துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் மருத்துவ அலுவலர்கள் இல்லாததால், நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன்: பட்ஜெட்டில் பள்ளிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை வரவேற்கிறோம். அதேநேரம், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்றுத்தர கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
'நிர்பயா' திட்டத்தில், 'சிசிடிவி' கேமரா பொருத்த மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல் பொருத்தப்பட்டுள்ளது.
உயர்வு
மாடு வளர்ப்பு பலரது நம்பிக்கை அடிப்படையில் உள்ளது. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
இதற்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பதில்: இடம் வைத்திருப்போர், மாடுகள் வளர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில்தான், தொழுவத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேநேரம், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தடுக்கப்படும் வகையில் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கவுன்சிலர்கள்: கவுன்சிலர்களுக்கு உயர்த்தப்பட்ட மேம்பாட்டு நிதி போதாது. அவற்றை மேலும் உயர்த்த வேண்டும். மேயர் மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டதுபோல், கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி 80 லட்சம் ரூபாயாவது உயர்த்த வேண்டும் என்றனர்.
மேயர் பிரியா: கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாயில் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு, 45 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேயர் மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயாக இருந்து, தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், மேயர் மேம்பாட்டு நிதி, 200 வார்டுகளுக்கும் பொதுவானது. அனைவருக்கும் தான் பயன்படுத்தப்படும்.
கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு ஏற்ப உயர்த்த முடியவில்லை என்றாலும், 50 லட்சம் ரூபாயாக அவர்களது மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.