ஆம்னி பஸ்கள் நெரிசல் இல்லாமல் செல்வது குறித்து ஆலோசனை
ஆம்னி பஸ்கள் நெரிசல் இல்லாமல் செல்வது குறித்து ஆலோசனை
ADDED : செப் 03, 2026 09:32 PM
சென்னை: சென்னையில் தமிழக போக்குவரத்து ஆணையர் தாமஸ் வைத்யன், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
‘கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்; சென்னை நகருக்குள் நுழையக் கூடாது’ என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 7ல் ரத்து செய்தது.
இதற்கிடையே, ஆம்னி பேருந்துகள் சென்னையின் உட்புற பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து தமிழக போக்குவரத்து ஆணையர் தாமஸ் வைத்யன், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இயக்குவதை முறைப்படுத்துவது, நெரிசல் இன்றி இயக்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
சென்னையில் இருந்து தினமும் 1,400 ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறோம். இதில், 80,000 பேர் வரை பயணம் செய்து வருகின்றனர்.
பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க, நீதிமன்றம் வாயிலாக அனுமதியும் பெற்றுள்ளோம். கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி இயக்க, போதிய அடிப்படை வசதிகள் இல்லை. முடிச்சூரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திலும், 120 ஆம்னி பேருந்துகளுக்கு மேல் நிறுத்த முடியாது.
ஆம்னி பேருந்துகள் இயக்கம் மற்றும் பயணியர் பாதிக்காத வகையில், தமிழக போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
