/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் ஷட்டர்
/
வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் ஷட்டர்
வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் ஷட்டர்
வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் ஷட்டர்
ADDED : அக் 12, 2024 12:38 AM

சென்னை, அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில், சதுப்பு நிலத்தை ஒட்டி வேளச்சேரி மற்றும் தரமணி, அடையாறு ஆற்றை ஒட்டி கிண்டி, கோட்டூர்புரம் மற்றும் ஆர்.ஏ.புரம் பகுதிகள் உள்ளன.
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி உள்ள அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் மழைக்காலத்தின்போது வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
அடையாறு ஆறு, பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் அதிகம் செல்லும்போது, கடல் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், வடிகால் வழியாக வெள்ளம் பின்னோக்கி திரும்பி சுற்றுப்புற பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க, முக்கிய கால்வாய், வடிகால்களில் 'ஷட்டர்' அமைக்கப்பட உள்ளது.
அதேபோல், அதை ஒட்டிய சாலைகளில் தேங்கும் வெள்ள நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மண்டலத்தில், 168வது வார்டு, கிண்டி சிட்கோ வளாகத்தில், 2 கி.மீ., நீள கால்வாய் உள்ளது. ஆலந்துார், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வடியும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக அடையாறு ஆற்றை அடைகிறது.
மழைநீர் ஆற்றில் வடியும் பகுதியில், கால்வாயில் குழாய் கட்டமைப்பு உள்ளது. முந்தைய மழைகளில், ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும்போது, பின்னோக்கி பாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தடுக்க, 1.23 கோடி ரூபாயில், ஆற்றை ஒட்டி கால்வாய் பகுதியில், ஷட்டர் அமைக்கும் பணி நடக்கிறது.
அதேபோல், கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனை அருகிலும், ஒரு கோடி ரூபாயில் ஷட்டர் அமைக்கப்படுகிறது.
மேலும், 170வது வார்டு, கோட்டூர்புரத்தில் ஆற்றில் இணைத்துள்ள, ஆறு இடங்களில் உள்ள வடிகால்களில், 50 லட்சம் ரூபாய் செலவில் ஷட்டர் அமைக்கும் பணி நடக்கிறது.
அதேபோல், 171வது வார்டில், அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களிலும் ஷட்டர் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, அடையாறு மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் கூறியதாவது:
அடையாறு மண்டலத்தில் உள்ள தரைப்பகுதி, கடல் மட்டத்தைவிட 4 முதல் 6 மீட்டர் உயரத்தில் உள்ளது. தரைப்பகுதியில் இருந்து, 2 முதல் 10 அடி வரை ஆழத்தில், கால்வாய் மற்றும் வடிகால் உள்ளன.
அடையாறு, பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் அதிகரிக்கும்போது, பின்னோக்கி பாய்வதை தடுக்க, ஷட்டர் அமைத்து, 100 குதிரை திறன் மோட்டார் கொண்டு நீரை இறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, குடியிருப்புகளில் மழைநீர் புகுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.