/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் 12 மணி நேரம் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
மணலியில் 12 மணி நேரம் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
மணலியில் 12 மணி நேரம் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
மணலியில் 12 மணி நேரம் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2025 11:27 PM
மணலி:''மணலியில் 12 மணி நேரம் மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்,'' என, மண்டல குழு கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர் குற்றஞ்சாட்டினார்.
மணலி மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன் உட்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 17வது வார்டு, செட்டிமேடு பகுதியில், 6.75 கோடி செலவில், கபடி மற்றும் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி மற்றும் வார்டு 19ல், 2.33 கோடி ரூபாய் செலவில், சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி உட்பட, 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டின் அடிப்படை தேவைகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
ஸ்ரீதரன், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: திருவள்ளுவர் தெருவில், கான்கிரீட் சாலையை 'மில்லிங்' செய்யாமல், அப்படியே போட்டுள்ளனர். சாலை மட்டம் உயர்வதால், வீடுகள் தாழ்வாகிறது. நேருஜி தெருவில், பல நாட்களாக சாலை போடாமல் விட்டுள்ளனர். 18வது வார்டு கர்ப்பிணியர் மணலி புதுநகருக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர்.
மேலும், தைராய்டு பரிசோதனைக்கு, மஞ்சம்பாக்கம், மணலிக்கு மாற்றி அனுப்புவதால், சிரமம் ஏற்படுகிறது.
நந்தினி சண்முகம், 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பொன்னியம்மன் நகர் பகுதியில், சாலையோரம் தனியார் மண்ணை கொட்டி லாரிகளில் எடுத்து செல்கின்றனர். அடிக்கடி பெய்யும் மழையால் 80 அடி தார்ச்சாலை, சகதியாக மாறி விட்டது. அதை சுத்தம் செய்வதற்கு மாநகராட்சிக்கு செலவாகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை அவசியம்.
மணலிபுதுநகர், 150 அடி சாலையில் இயங்கி வரும் மயான பூமிக்கு, தனியாக ஜெனரேட்டர் மற்றும் மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். தவிர, 9 மீட்டர் அகலமுள்ள மழைநீர் வடிகால்வாயை முறையாக துார் வார வேண்டும். ஆறுடன் இணையும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள, மதகுகள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
ராஜேந்திரன், 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: குடிநீர் குழாய்கள், 2011ல் போடப்பட்டது. அவற்றை மாற்றித் தர வேண்டும். பாதாள சாக்கடைக்காக தோண்டும் பள்ளங்களில், மண்ணை அப்படியே போட்டு மூடி விடுகின்றனர். மண் இலகுவாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. குறிப்பாக, விவேகானந்தா பள்ளி செல்லும் சாலை, சேறாக உள்ளது.
ராஜேஷ் சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: மழைக்காலத்திற்கு முன் மணலி - நெடுஞ்செழியன் சாலையில் உள்ள, ஆரம்ப சுகாதார மையத்திற்கான புதிய கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டும். மணலியில், எட்டியப்பன் தெரு, திருவேங்கடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில், ஐந்து சிறிய மின்மாற்றிகள் பொருத்த கோரினேன். இரண்டு வைத்துள்ளனர்.
இருப்பினும், சில நேரங்களில், 12 - 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால், மக்கள் சிரமமடைகின்றனர். மணலி, பாடசாலை தெருவில் இரண்டு ஆண்டுகளாக தெருவிளக்கு கிடையாது. கான்கிரீட் சாலை அமைத்து, ஒன்பது மாதமாகியும் தெருவிளக்கு அமைக்கவில்லை.
வார்டு அலுவலகத்திற்கு, ஆரம்ப சுகாதார மையம் மாறுவதால், இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி இருப்பதால், சீரமைத்து கொடுக்க வேண்டும்.